பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

பதிப்புரை


தமிழிலக்கியத்திற்குப் புதுத் துறையான விளையாட்டுத் துறையில், விளையாட்டுக்கள் பற்றிய தமிழிலக்கிய நூல்கள் அதிகமாக வெளியிட வேண்டும் என்பது எங்களின் பேரவா.

இத்தகைய முயற்சிக்குப் பெரிதும் தணைபுரிகின்ற எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதித் தந்திருக்கிறார்கள்.

திரு. நவராஜ் செல்லையா அவர்கள், சிறந்த கவிஞர். நல்ல நாடக ஆசிரியர் இயக்குநர் அத்துடன் சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தமிழகமெங்கும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் பந்தயங்களிலும் பங்குகொண்டு வெற்றி வீரராக விளங்கியவர்.

உடற்கல்விக்கான டிப்ளமா தேர்வில் (D.P.E.) தனிச் சிறப்புக்குரிய மதிப்பெண்கள் பெற்று (Distinction) முதல் நிலையில் தேறி, மாநிலத்திலேயே முதலாவதாகவும் வெற்றி பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் (M.A.) பெற்று தமது தமிழ் இலக்கியப் புலமையையும் விளையாட்டுத் துறை அனுபவங்களையும் இணைத்து, விளையாட்டுத் துறைக்குப் பல அரிய நூல்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தந்து வருகிறார்.