பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வீரமாமுனிவர்


உணர்ந்த முனிவர் அவ்விரு தமிழுக்குமுரிய இலக்கணத்தைத் தனித்தனியாக லத்தீன் மொழியில் எழுதினார். அந்நூல் இரண்டும் இப்பொழுது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இருவகைத் தமிழின் இலக்கணத்தையும் கிருஸ்தவ வேதியர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டார் முனிவர்; திருக்காவலூரில் - ஒரு கல்லூரி அமைத்தார்; அங்குத் தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணம் போதித்தார் ; கிருஸ்து மத வேதியர்கள் பிழையின்றித் தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் வல்லவராக விளங்குதல் வேண்டுமென்று பெரிதும் முயன்றார்.

இன்னும் நகைச்சுவை நிரம்பிய கதைகளும் எழுதினார் வீரமாமுனிவர். அவற்றுள் 'பரமார்த்த குரு கதை’ என்பது சாலச் சிறந்தது.

இத்தகைய தமிழ்த்தொண்டு புரிந்த முனிவர் அறுபதாம் வயதில் அம்பலக்காட்டிலுள்ள கிருஸ்தவ மடத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் ஆக்கிய நூல்களால் தமிழ்த்தாய் அழகு பெற்றாள். தேம்பாவணி, தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது. தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குகின்றார்.