பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


பசுமரத்தாணிபோற் பதிந்தது. பல மொழிகளை ஒப்பிட்டு ஆராயும் முறையில் அவருக்கு இருந்த ஆசை வளர்ந்தெழுந்தது. சர்வகலாசாலையில் பி. ஏ. பட்டம் பெற்றுத் தமிழ்நாட்டில் தொண்டு செய்யப் போந்தபோது அவர் மனத்திலெழுந்த ஆசை நிறைவேறுவதற்கு நல்லதோர் வாய்ப்புக் கிடைத்தது.

கால்டுவெல் ஐயர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள நன்மையை நன்கு அறிந்துகொள்ள வேண்டுமானல், அவர் காலத்திற்கு முன்னே தமிழ் நாட்டில் வழங்கிய சில கொள்கைகளைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தென்னாட்டு மொழியாகிய தமிழை வடநாட்டு மொழியாகிய ஆரியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. நினைப்பிற்கு எட்டாத நெடுங் காலமாக ஆரியமும் தமிழும் இந்திய நாட்டில் வழங்கி வருதலால் அவற்றைக் கடவுளே பிறப்பித்தார் என்று அறிஞர்கள் கருதினார்கள். ஆதிபகவனே ஆரிய இலக்கணத்தைப் பாணினி முனிவர்க்கும், தமிழ் இலக்கணத்தை அகத்திய முனிவர்க்கும் அறிவுறுத்தியதாகப் பாடினர் ஒரு புலவர்.[1]


  1. "வடமொழியைப் பாணினிக்கு
    வகுத்தருளி அதற்கிணையாத்
    தொடர்புடைய தென்மொழியை
    உலகமெலாம் தெர்ழுதேத்தும்
    குடமுனிக்கு வலியுறுத்தார்
    கொல்லேற்றுப் பாகர் எனில்
    கடல்வரைப்பின் இதன் பெருமை
    யாவரே கணித்தறிவார்.“