பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேதநாயகம் பிள்ளை


அப்பொழுது தஞ்சை நாட்டில் கடும் பஞ்சம் வந்துற்றது. அதன் கொடுமையைக் கண்ட வேத நாயகர்! நெஞ்சுருகிப் பாடினார். "ஐயோ! மண்ணில் அநேகர் என் கண்முன்னே மாய்ந்தார்; எண்ணிறந்தவர் சருகுபோல் காய்ந்தார் : கண்ணிருண்டு களைத்து உடல் ஓய்ந்தார்; ஆண்டவனே உன்னையன்றி யாரே துணையாவார்“ என்று முறையிட்டார். ஒல்லும் வகையால் பசியின் கொடுமையைத் தணிப்பதற்குத் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் செலவிட்டு மாயூர நகரின் பல பாகங்களில் கஞ்சிச் சாலைகள் அமைத்தார். அங்கு வார்த்த கஞ்சியைப் பருகி மனங்குளிர்ந்து அவரை வாயார வாழ்த்திய ஏழை மாந்தர் பல்லாயிரவர். அவ்வறப் பணியைக் கண் குளிரக் கண்ட கோபாலகிருஷ்ண பாரதியார் வேத நாயகரை வியந்து 'நீயே புருஷ மேரு' எனத் தொடங்கும் கீர்த்தனம் பாடினர். பாரதியார் இயற்றிய கீர்த்தனங்களுள் இதுவொன்றே நரஸ்துதி[1] என்றால் வேதநாயகர் பெருமைக்கு வேறு சான்றும் வேண்டுமோ?

அக்காலத்தில் மாயூரத்துக்கு அண்மையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் சீலர் தலைவராக விளங்கினார். கற்றவரும், பொருளற்றவரும் அவர் ஆதரவை நிரம்பப் பெற்றனர். கலையின் கோயிலாகவும், கருணையின் நிலையமாகவும் திகழ்ந்த தேசிக மூர்த்தியிடம் வேதநாயகர் மிகவும் ஈடுபட்டார்.


  1. கோபாலகிருஷ்ண பாரதியர்-டாக்டர், சாமிநாதய்யர் எழுதியது. பக். 81.