பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

99


பெண் என்றால் சகல விதிகளும் பரிந்து பேசுமே! அக்காலத்திலும் அந்த முறைதான் இருந்திருக்கிறது. ஒரு முறைப் பட்டத்திற்கு வந்துவிட்ட ராணி, தன் வாழ்நாள் முழுதும் ராணியாகவே இருப்பாள். இறப்பாள். ஆனால், ராஜாவாக வந்தவனுக்கு? அங்கேதான் ஆண் பட்டவேதனை மலிந்து கிடக்கிறது.

ராஜாவாகப் பதவி ஏற்றவனுக்குரிய காலம். 49 அல்லது 50 முழுநிலாக் காலம். அதாவது, அவன் 50 பெளர்ணமியைப் பார்க்கலாம். அதுவரை அரண்மனையின் சுகத்தை, அழகியின் துணையை, அரச பதவியின் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். சுகிக்கலாம். அந்த காலம் முடிந்த பிறகு, மீண்டும் ஒரு விளையாட்டுப் பந்தயம் நடக்கும். அந்தப் பந்தயத்தில், அரசனும் கலந்துகொள்வான். மற்றக் கட்டிளங் காளையர்களும் பங்கு பெற்றுப் போட்டியிடுவார்கள்.

அந்தப் போட்டியிலே வெற்றி பெறுகின்ற வீரனுக்குக் கிடைக்கக்கூடிய பரிசோ, பெறற்கரிய பரிசுதான். ஆமாம். அந்த வீரனுக்கு அரச பதவியும் கிடைக்கும். அந்தப்புரத்து ராணியும் கிடைப்பாள். என்ன? முன்னே இருந்த மன்னன் என்ன ஆனான்? போட்டியிலே அவன் வெற்றி பெற்றால் மீண்டும் மன்னர் பதவியும், ராணிக்குக் கணவர் என்ற உரிமையும் கிடைக்கும். வெற்றிபெற்றவன் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வான். அந்த வீரனுக்கு ராணி மாலையிடுவாள். மனைவியாவாள், மகுடம் அவன் தலையில் சூட்டப்படும்.

தோற்ற அரசன் கதியோ அதோ கதிதான். தலைமைக் கடவுள் இருக்கும் பீடத்திலே அவன் தலையை வைக்கச் செய்து துண்டித்துவிடுவார்கள். ஆமாம். பலிபீடத்திலே மரணம் அடைவதுதான் தோற்ற அரசனுக்குரிய தண்டனை. சில சமயங்களில், அவனைக் கொண்டுபோய் மலை உச்சியில்