பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

117


மாற்றார்களும் மதிக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினான் தியாஜனிஸ் என்றால், அது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இருந்த பொழுது அவனைப்பற்றி எல்லோரிடையிலும் இருந்த மதிப்பு, இறந்த பிறகு இன்னும் அதிகமாயிற்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நம் நாட்டில் முகராசி, கவர்ச்சி என்பார்களே, அது அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்ததுபோலும்.

தியாஜனிஸ் சிலை நிறுவப்பட்டது என்பதை முன்னரே கூறியுள்ளோம். தியாஜனிஸ் உயிரோடிருந்தபோது, அவனை எதுவும் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் எதிரி ஒருவன்.

அன்றைய தினம் ஆங்காரம் மிகுதியாகிப்போய் உயிரோடிருக்கும் பொழுதுதான் அவனை அடிக்க முடியவில்லை. அவனது சிலையையாவது அடித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்ற நப்பாசை மிகுதியால், நள்ளிரவு நேரத்தில் சிலையருகே சென்றான். தன் ஆத்திரம் தீர, ஆவேசமும் ஆசையும் அடங்க, சாட்டையால் சிலையை அடித்துத் தீர்த்தான்.

அந்த அடியால் அசைந்த சிலை, அவன் மீதே விழ, அந்த எதிரியும் அதே இடத்தில் நசுங்கிச் செத்தான்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த மக்கள், சிலையின் கீழ் ஒருவன் செத்துக்கிடப்பதை அறிந்து வியந்தார்கள். தியாஜனிசைப் போற்றினார்கள் ஏன் தெரியுமா?

உயிரோடிருந்த பொழுது எல்லோரையும் வென்று புகழ் பெற்றான். செத்துச் சிலையான பிறகும் கூட, தன் எதிரியைக்கொன்று வென்று கிடக்கிறானே என்பதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டு அவன் வலிமையை வாயாராப் புகழ்ந்தார்கள்.