பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

119


நிலையே நீடித்து வந்தது. ஆகவே மீண்டும் டெல்பியை நோக்கிப் படையெடுத்தார்கள் தங்கள் குறையைச் சொல்ல.

நீங்கள் தியாஜனிசை மறந்து விட்டீர்கள் என்று அசரீரீ சொல்லிவிட்டது. தியாஜனிஸ் இறந்தல்லவோ போய் விட்டான்! அவனை எங்கே போய் பிடிப்பது? அர்த்தம் விளங்காமல் துடித்துப் போய் நின்றவர்களுக்கு, வைத்த சிலையின் ஞாபகம் வந்தது.

அதைத்தான் நடுக்கடலில் போய் தூக்கியெறிந்து விட்டோமே என்ற நினைவு வந்ததும், பெரிதும் குழம்பினார்கள். கடலில் போய் எங்கே தேடுவது? பஞ்சப் பிரச்சினையை விட பெரிய பிரச்சினையாக இந்த நினைவு வாட்டி வதைத்தது.

சில நாட்கள் கழித்து, செம்படவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று, வலைவீசிய பொழுது, தியாஜனிஸ் சிலை வந்து சிக்கிக் கொண்டது. கனமாயிருக்கிறது என்று கடினப்பட்டு வலையை இழுத்தவர்களுக்கு சிலையாயிருந்தது மிகவும் ஏமாற்றமாக இருந்தாலும், அதிகாரிகளை ஆனந்தப்பட அதுவே போதுமானதாக அமைந்துவிட்டது.

சிலை வந்து சேர்ந்து, பீடத்தில் அமர்த்தப்பட்டபோது, தாசஸ் நகரத்துப் பஞ்சம் தீர்ந்துசெழிப்படைந்தது, மக்களுக்கு தியாஜனிஸ் மேலிருந்த அன்புமாறி இப்பொழுது பக்தியாகிவிட்டது.

மீண்டும் சிலை காணாமற் போனால் கஷ்டத்துக்குள்ளாக நேரிடும் என்று எண்ணிய அவர்கள், அந்த சிலையை பீடத்தோடு பீடமாக சேர்த்து, இரும்புச்சங்கிலியால் பிணைத்து விட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் பயபக்தி அதிகமாயிற்று.

வாழ்க்கையில் அபரிதமான வலிமையும் ஆற்றலும் கொண்டு வாழ்ந்த வீரர்களைப் போற்றி வைத்திருக்கும்