பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பொழுது, இவைகளெல்லாம் உண்மையிலேயே நடந்தனவா இல்லையா என்று நீங்கள் சந்தேகத்தில் சலனம் அடையாமல் படித்தால் வியப்பூட்டும் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்கத்தில் நடைபெற்றன என்பது உண்மை என்று, எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், இப்படி நம்ப முடியாத பலகதைகள் எப்படி உருவாயின என்றால், இது உண்மையிலே நடந்தனவா அல்லது வரலாற்றாசிரியர்களின் வளமார்ந்த கற்பனையா என்பதை நாமே ஊகித்து உணர்ந்து கொள்ள வேண்டியதுதான், வேறு வழியில்லை.

வீரக் கதைகளின் கதாநாயகர்களாக விளங்குபவர்கள் எல்லோரும், பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே பங்கு பெற்றவர்கள், பாங்குடன் வெற்றி பெற்றவர்கள், பலராலும் பாராட்டப்பட்டவர்கள் என்பதற்கு எள்ளளவும் ஐயமின்றி, ஆதாரங்களுடன் பல குறிப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதும் உண்மைதான். ஆனால், வாழ்க்கையிலே உண்மையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை வருணிக்கும் பொழுது, நம் நாட்டில் உலவும் புராணநாயகர்களான அர்ச்சுனன், பீமன், கர்ணன், இராமன், கண்ணன் போன்றவர்களையும் மிஞ்சிப் போய் விடுகின்ற அளவில் தான் இந்தவீரக் கதைகள் அமைந்திருக்கின்றன.

ஆகவே தான், விளையாட்டு உலகில் வளமாக வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, வீரக் கதைகள் என்ற தலைப்பிலே வடித்துத்தந்துள்ளேன். இக் கதைகளிலே வரும் இனிய அவ் வீரர்கள், தங்கள் தேகத்தை எந்த அளவில் தரமும் திறமும் உள்ளனவாக வளர்த்துக் கொண்டிருந்தனர் என்ற ஒரு கனிவான உண்மைதான் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும்.