பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


நாட்டவரும் மாடுகளையே செல்வமாகப் பெரிதும் மதித்து வந்திருக்கின்றனர். மாடு என்னும் சொல்லுக்குப் பொன் என்னும் பொருளையும் தந்திருக்கின்றனர். இதனைக்

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை."

என்னும் வள்ளுவர் வாக்காலும்,

‘எத்தாயர் எத்தந்தை, எச்சுற்றத்தார் எம்மாடு’

என்னும் அப்பர் பெருமானர் அருள்மொழியாலும் நன்கு அறியலாம்.

பண்டம் மாற்றும் பழக்கம் பண்டைய அக்கேயரிடையே இருந்ததாலும் எண்ண இடம் உண்டு. நாணயங்கள் நடைமுறையில் வருவதற்குமுன் இவ்வழக்கமே எந்நாட்டிலும் கைக்கொள்ளப்பட்டது என்னலாம். முத்திரையிட்ட உலோக நாணயம் நடைமுறையில் வழங்க வசதி குறைந்த காலங்களில் இன்றியமையாத பொருள்களின் பொருட்டு மாடுகளே ஈடுகாட்டப்பட்டன. இவ்வமயத்தில் மற்ரறொரு செய்தியைக் கூறப்புகின் நாம் வியக்காமல் இருக்க இயலாது. அக்கேயர் தம் மகளை மணம்முடிக்க விரும்பினால், சில எருமைகளை அம்மகளுக்கு ஈடு தந்தால், மாப்பிள்ளை வீட்டார்க்கு மணமுடிக்க முன் வருவார்களாம். நம் நாட்டில் கொல்லேறு தழுவுவார்க்குத் தம் குலக்கொழுந்தைக் கொடுத்தனர். இவர்கள் கொல்லேறு கொடுப்பவர்க்குத் தம் குலக் கொடியையும் கொடுத்து வந்தனர்.