பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


ஓட்டம், மற்போர், எறிபந்து முதலியன ஆடித் தம் உடல் உரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர்கட்குப் பரதமும் இடையிடையே பயிற்றுவிக்கப்பட்டது. இவர்கள் தமக்குள்ளேயே இருதொகுதிகளாகப் பிரிந்து விளையாட்டுக்களை ஏற்படுத்தி விரோத உணர்ச்சியற்று விளையாட்டு உணர்ச்சி கொண்டு விளையாடி வந்தனர்.

இங்ஙனமாக உடல் உரத்தின் பொருட்டுப் பெரிதும் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனரே அன்றி உள்ளப் பயிற்சியாகிய எழுதுதல், படித்தல் ஆகிய பயிற்சியில் குறையுடையவராகவே காணப்பட்டனர். ஆனால், மனனம் செய்யும் பழக்கம் கையாளப்பட்டு வந்தது. நாட்டுச் சட்டங்கள், ஹோமர் முதலான புலவர் பெருமக்களின் பாடல்கள் மனப்பாடத்திற்கு உரியனவாக விளங்கின. பொதுமக்களிடையே சொற்பொழிவு ஆற்றும் கலைமட்டும் பழகுதற்குச் சிறிதும் இடம்கொடுத்திலர். இவர்கள் சுருங்கிய அளவில் பேச மட்டும் பழக்கப்படுத்தப்பட்டனர்.

இத்தகைய பயிற்சி காரணத்தால் ஸ்பார்ட்டா மக்கள் இலக்கிய அறிவில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிற்று எனலாம். இவர்கள் பெற்ற பயிற்சிகள் எல்லாம் நாட்டுக்குரிய நல்ல போர் வீரர் ஆதற்கேற்ற பயிற்சியாகவே இருந்தன.

பிள்ளைக்குப் பதினெட்டு வயது வந்ததும், அவன் இரகசியக் கூட்டம் என்று அமைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் பயிற்சி பெறும் நிலையைப் பெறுகிறான். அக்கூட்டம் கிரிப்டியா (Crypteia) என்று