பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

1969-ல் எண்ணூரிலே பாவாணரின் மகளார் திருவாட்டி மங்கையர்க்கரசி இராபின்சன் வீட்டில் முதன் முதலாக நேரில் அவரைச் சந்திக்கும் பேறு பெற்றேன். அப்பொழுது நான் எண்ணூரில் குடியிருந்தேன். நான் தமிழ் முதுகலை (M.A.) முடித்திருந்த சமயம் அது. நான் இயேசு பெருமானின் ஓர் எளிய அடியான் - நற்செய்தி ஊழியன், தமிழ் மொழியில் சிறிது பயிற்சியும் பற்றுமுள்ளவன் என்பதை அறிந்ததும், கிறித்தவக் கீர்த்தனம் என்னும் இந்நூலை என்னிடம் கொடுத்தார். சில பாடல்களையும் பாடிக் காட்டினார். கிறித்து பெருமானிடத் தில் அவருக்கு இருந்த பற்றுமையையும், அவருக்குத் திருப் பணி ஆற்றுவதற்கு அவருக்கு இருந்த இளமைக் கால விருப்பத்தையும் எடுத்துக் கூறினார். கிறித்தவர்களும் தூய தமிழைப் போற்ற வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பாக நல்ல தமிழ்மொழியில் பைபிளை மொழியாக்கம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியில் அவ்வளவு வரவேற்பும் வாய்ப்பும் காணா நிலையில் அவரது மனத்தை தமிழ்மொழி, இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதையும் அறிவித்தார்.

என்னிடத்தில் கொடுக்கப்பெற்ற கிறித்தவக் கீர்த்தனம் என்னும் அவருடைய நூலில் நான் விருப்பம் காட்டி, நூற் பொருளின் சிறப்பினைக் கூறியபோது அதனை இயலுமேல் வெளியிட்டுப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தார். அவர் உயிரோடு இருந்த நாள்களிலேயே அதனை விெளியிடு வதற்குப் பலமுறை நான் முயன்றும் வெற்றி பெறவில்லை.

சில மாதங்களுக்கு முன்னால் பூக்கூடை இதழுக்கு, அதன் ஆசிரியர் திரு. இராச்குமார் அவர்களுடன் பாவாணரிடம் பேட்டி காணச் சென்றிருந்தேன். அந்தப் பேட்டி பூக்கூடையில் 1980 திசம்பர், 1981 சனவரி ஆகிய இரு இதழ்களிலும் வெளிவந்தது. இறுதியாக அவருடன் நீண்ட நேரம் பேசு வதற்குக் கிட்டிய வாய்ப்பு அதுதான். பேட்டியை முடித்து வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, முன்னரும் சந்திக்கும் போதெல்லாம் சொல்வதுபோல, 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியை நிறைவு செய்வதற்காகவே கடவுள்