பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 கிளிஞ்சல்கள்

  அவளும் பத்து ஏன் இருபது வருஷங்களாக இதே பதில்தான் சொல்லி வருகிறாள். "அதற்கென்ன என்ன அவசரம்?" என்று திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இப்பொழுது நாற்பது எட்டுகிறது. ஆனால் அவளைப் பார்க்கின்றவர்கள் அப்படிச் சொல்லுவது இல்லை; அதற்குக் காரணம் அவளை இளமையாகவே வைத்துப் பார்க்கும் ஆர்வம்தான்.
  "அறிவுக் கதிர்கள் ஒன்று இரண்டு வெளிப்பட்டாலும் அவற்றை மறைக்கக் கரு மை பயன்படுகிறது. பல்லிழந்தால் 'செட்' உதவுகின்றது. நிறம் மாறினால் அதன் தரம் கெடுவதில்லை; மை ஊட்டப்படுகிறது.
  கண்களுக்கு மை தீட்டப்பட்டு வந்தது. அது இப்பொழுது உச்ச நிலையை எட்டுகிறது; அதற்குக் கிடைத்த உயர்வு அது.
  கூந்தல் அதைப் பற்றிப் பேசும் காலம் இது அல்ல; அதற்காகவே காவியப் புலவர்கள் பத்துப் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தனர்; அதற்கு அவசியம் இங்கு ஏற்படவில்லை. வெட்டுகளுக்கு உள்ளாகி வெளிவரும் படம் அது; சென்சார் செய்யப்பட்டுச் சீவி விடப்பட்ட ஒன்று.
  பார்க்க அவள் கவர்ச்சியைத் தந்தாள்; என்றாலும் மடித்து வைத்த தாள்கள் சில கோடுகளைப் பெறத்தான் செய்கின்றன. நிறைய துகள்கள் அந்தக் கோடுகளை நிரப்பத் தேவைப்பட்டன. அவள் நிறம் அவள் உடன் பிறந்தது. அது அவள் கால வேகத்தைத் தடுத்து நிறுத்தியது. மங்கையர் கழகத்தில் அவள் ஒரு அங்கத்தினர் என்று அவள் ஏற்கப்பட்டாள்.
  அந்த நிறம் அவள் தாய் தந்தது. அவள் தோலை அப்படியே இவளுக்கு உரித்து வைத்தாள் என்றால் அது மிகையாகாது. பழுப்பு நிறத்தில் சிறிது இழப்பு அவ்வளவுதான்.