பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 43 அதன் எழுத்தழகில் மயங்குவான். தன் நெருங்கிய நண்பர்களுக்கு வலியக் கொண்டு போய்க் கொடுப்பான்,. அவர்கள் அதைப் படிக்க மாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியாது; ஆர்வம் இத் தவறைச் செய்யத் தூண்டுகிறது. அதை யாராவது படிக்க வேண்டும்; பாராட்ட வேண்டும் என்பது அவன் ஆசை. அதற்குக் காரணம் சினிமாக் கவிஞர்களைப் பற்றிப் பலரும் பாராட்டிப் பேசுவதால்தான்; 'கவி அரசு அந்தப் பட்டம் இவனைக் கவர்கிறது. இவனைப் பற்றிப் பலரும் முரசு கொட்ட வேண்டும் என்பது இவன் வேட்கை; அதை அச்சிடுவது, வெளியிடுவது ஒரு திருமண வைபவம்தான். கலைஞரை அழைத்து வெளியிட வேண்டும் என்பது இவன் பெரு விருப்பு. அது நிறைவேறவில்லை. அந்த அளவு இவன் வளரவில்லை; வளரும் கலைஞர் என்ற வரிசையில் இவனுக்கு ஒரு இடம் கிடைத்தது. பாராட்டுரைகள் அவை அவன் வளர்ச்சிக்கு உரம் ஆயின. யார் கண்ணில் படுகிறார்களோ அவர்கள் அவனுக்கு இலக்கு ஆயினர். தனக்குப் பழக்கமான மருத்துவர் அவரைக் கண்டதும் தன் சாதனையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை அவர் பெயரிட்டு அவர்பால் தான் வைத்திருக்கும் மதிப்பு மரியாதை அதை அளவிட்டு அதற்கு முன்னால் அதை எழுதி இட்டுக் கீழே தன் பேனாவைப் பதித்துவிட்டுத் தருகிறான். அவர் பார்வை வேறு; எந்த மனிதரையும் ஆரோக்கியம் உள்ளவர் என்று அவர் நினைப்பது இல்லை; இந்தக் கவிதை நூல் நீட்டியதும் இவன் ஒருவகை மன நோயாளி என்பது அவர் கணிப்பு. என்றாலும் காணிக்கை என்பதால் கை நீட்டி வாங்குகிறார். நூலுக்கு அச்சிட்ட அதைவிட அதன் முகப்புப் படத்துக்கு அவன் அதிகம் செலவு செய்திருப்பது அவருக்குத் தெரிகிறது.