பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறுசீர் விருத்தம் அவளின் காதலுள்ளம்

உணவுண்ணச் சென்றாள், அப்பம் உண்டனள், சீனி யோடு தணல்நிற மாம் பழத்தில் தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்! மணவாளன் அருமை பற்றி மனம்ஒரு கேள்வி கேட்க, 'இணையற்ற அவன் அன்புக்கு நிகராமோ இவைகள்' என்றாள்.

பிள்ளைகள் நினைவு

பள்ளிக்குச் சென்றி ருக்கும் பசங்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்து மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று) உள்ளத்தில் நினைத்தாள்;ஆனால் மூத்தவன் உண்டென் றெண்ணித் தள்ளினாள் அச்சந் தன்னை! தாழ்வாரம் சென்றாள் நங்கை!

வீட்டு வேலைகள்

ஒட்டடைக் கோலும் கையும் உள்ளமும் விழியும் சேர்த்தாள்; கட்டிய சிலந்திக் கூடு, கரையானின் கோட்டை யெல்லாம் தட்டியே பெருக்கித் "தூய்மை" தனியர சாளச் செய்து, சட்டைகள் தைப்ப தற்குத் தையலைத் தொட்டாள் தையல்!

தையல் வேலை

ஆடிக்கொண் டிருந்த தையற் பொறியினை அசைக்கும் ஓர்கை; ஓடிக்கொண் டிருக்கும் தைத்த உடையினை வாங்கும் ஓர்கை! பாடிக்கொண் டேயிருக்கும் பாவையின் தாம ரைவாய்;