பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர்.எஸ்.நவராஐ் செல்லையா


2. கொழுப்பும் குண்டும்


ஆமாம்! உடம்பு எப்படி குண்டாகிறது?

அனைவருக்கும் ஏற்படுகிற அதிசயமான வினாதான். ஆனால், விடையில்தான் குழப்பம்.

ஏற்படுகிற வினாவுக்குக் கிடைக்கிற விடையானது, பொதுவாகத் தான் இருக்கும். ஆனால், அவை புரிந்து கொள்ளும்படியாக வருவதில்லை.

உடம்பு குண்டாகிறது எப்போது என்றால், உடலின் எடை இருக்க வேண்டிய அளவுக்கு மேல் சேர்ந்து விடுவதால்தான். அதிக எடையில் உடம்பு அல்லாடு வதற்கே மட்டற்ற கொழுப்பு (Obesity) என்று பெயர்.

குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், ஒருவரது உயரத்திற்கும், வடிவத்திற்கும், ஆண் பெண் ஆகியவரின் உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு, இவ்வளவுதான் உடல் எடை இருக்க வேண்டும் என்று அறிவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுக் கூறியிருக்கும் எடை அளவுக்கு மேல், 20 சதவிகிதம் அல்லது அதற்கும் மேலாகக் கொண்டிருப்பதுதான் அதிக எடையுள்ள உடம்பாகிவிடுகிறது.

மட்டற்ற மகிழ்ச்சி என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மட்டற்றக் கொழுப்பு என்கிறார்களே அது என்ன?

முதலில் கொழுப்பு என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.