பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறள் ☆ 99


நிலையில் இருந்த சுரண்டல்கள், கடன்கள் நாடுகளைத் தழுவியனவாக உலகந்தழீஇயனவாக வளர்ந்துவிட்டன. ஊழல் தேசியமயப்படுத்தப் பெற்றுவிட்டது. இன்றுள்ள நிலையில் நாடு நலம் பெற என்ன செய்யவேண்டும்?

தமிழ்த் தந்தை திரு.வி.க. அவர்கள் தமது நூல்களில் கார்ல்மார்க்ஸை 'மாமுனிவர்' என்றார்; இந்தியா திருக்குறளும் மூலதனமும் காட்டும் திசையில் நடந்தால் வளரும் என்று நம்பினார். ஆதலால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை விரும்புகிறவர்கள் வள்ளுவத்தையும் மூலதனத்தையும் ஒரு சேரக் கற்றுத் தெளிய வேண்டும். உணர்தல் வேண்டும். வள்ளுவமும் மார்க்சியமும் காட்டும் புதியதோர் உலகத்தை அமைக்கும் பணியில் போர்க் குணத்துடன் ஈடுபடவேண்டும்; போரிட வேண்டும். சுகவாழ்வுப் போக்கிலிருந்தும் நுகர்பொருட் சந்தைகளிலிருந்தும் வெளியேறிச் சமூக சிந்தனையைப் பெற்று,

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்"

என்ற பாரதியின் கனவை நனவாக்கப் போரிட வேண்டும்.

திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் எழுதப் பெற்றது. கார்ல்மார்க்ஸின் மூலதனம் 150 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பெற்றது. இரண்டு நூல்களும் சமூக இயல், பொருள் இயல் துறைகளில் ஒருமைப்பட்டுள்ள மாட்சிமையை உணர முடிகிறது. "பொருள் இல்லார்க்கு. இவ்வுலகம் இல்லை” என்ற திருக்குறள் மூலதனத்தின் பொருள் முதல் வாதத்திற்கு அரண் செய்கிறது. மூலதனம், உழைப்பை, உழைப்பாளியை ஊக்குவிக்கிறது; உழைப்பாளிகளே ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. திருக்குறள்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்." (1033)

என்று கூறுகிறது. மீண்டும்,