பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 121


அப்படித்தான். காதல் இயற்கையில் அமைந்தது. மலர்வது; ஒருவர்க்கொருவர் தேவையானது. நட்போ அப்படியன்று. நட்பில் ஒருபால் இன்பமும், ஒருபால் துன்பமும் ஒருபால் ஆக்கமும் ஒருபால் இழப்பும் நேரிடக் கூடும். அங்ஙனம் நேரும்பொழுதும் தடம் புரளாமல் நிற்கும் நட்புணர்வே முழுமையான நட்பு வளர்த்த நட்பு வாழ்விக்கும் நட்பு. காதலுக்கு அத்தகைய விழுமிய வாய்ப்புக்கள் இல்லை. காதலிலும் தியாகம் உண்டு. தன்னல மறுப்பு உண்டு. ஆனாலும் இயற்கை அமைப்பு அப்படியல்ல. காதல் வாழ்க்கையில் இன்புறலும் இன்புறுத்தலும் உடன் நிகழ்வன. ஆதலால், நட்பிற்கு அடுத்ததே காதல். அங்ஙனம் கூறுவதால் காதல் வாழ்க்கை எளிதென்று கருதற்க. பால்வேறுபட்ட இருவர் கூடி வாழ்தல் எல்லாம் மனையறம் ஆகிவிடாது. ஒரு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நேரமும் விளைந்த பயிரை அறுவடை செய்யும் காலமும் சிறு பொழுதேயாம். ஆனால் மாளிகையைக் கட்டி முடிக்க நீண்டகாலம் பிடிக்கும். அதுபோலத்தான் - வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளைச் செழுமைப்படுத்தி வளர்க்கப் பலகாலும் முயற்சி செய்ய வேண்டும். ஆதலால் இல்வாழ்க்கையென்ற மனையறம் சிறக்க, அவ்வழி சமுதாயம் செழிக்கக் காதல் வாழ்க்கை சிறப்புற அமையவேண்டும் என்பதனால் தனியே காமத்துப்பால்” என்றே ஒரு பாலை அமைத்து ஓதிய வள்ளுவத்தின் அருமை அறிக.

காதல் வாழ்க்கை அருமையுடையது; சிறப்புடையது: செவ்விய தன்மையுடையது. எளிதில் காதலராதல் இயலாது; காதலின்பத்தினை முழுதுணர்ந்து துய்த்தல் அரிது: இத்துறையில் வெற்றிபெற்றார் சிலரே! இது வள்ளுவத்தின் கருத்து.

"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்."
(1289)