பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 123


தோய்வான். தலைமகள் மனைமங்கலமாகத் திகழ்வாள்; வற்றாத வளமனையாக ஆக்குவாள். நன்மக்கட் பேற்றின் மூலம் நாடே பயன்பெறும். அது தானே மனை வாழ்க்கை. வாழ்க்கைக்குத் துணையாக அமையும் தலைவியை வள்ளுவம் "வாழ்க்கைத் துணை" என்று வாழ்த்துகிறது. வாழ்க்கைத் துணை மட்டுமல்ல, வாழ்க்கையின் நலமாகவே விளங்குவதால் "வாழ்க்கைத் துணை நலம்" என்கிறது. வள்ளுவத்தின் தலைவி கற்புக் கடம் பூண்ட தெய்வம். அவள் தன் கற்பை மட்டும் தானா காத்துக் கொள்கிறாள்? தன்னுடைய தலைவன் கற்பையும் காத்துக் கொள்வதில் சோர்வடையாள் என்பதைத் தலைவன் உணர்கிறான். பரத்தமை வழி தலைமகன் செல்லாது தலைவி தடுத்தல் வேண்டும். புத்திளம் தன்மைமிக்க இன்ப உணர்வுகளை அவன் துய்க்குமாறெல்லாம் வழங்கி இன்பப் பெட்டகமாக அமைந்து அவன் புறத்தே செல்லாமல் தடுக்கிறாள். ஒரேவழி, தன் தலைவன் சோர்வு உடையவனாக விளங்கினாலும் புறத்தே தூற்றாமல் அயலறியாவண்ணம் மறைத்துத் தலைவனின் புகழைக் காப்பாற்றுகிறாள். வள்ளுவத்தின் தலைவி, "தன் குடும்பம்” என்ற சிற்றெல்லைக்கு ஆளாகித் தலைவனின் கொடை வளத்தைத் தடுத்து நிறுத்துவதில்லை. அவன் வாக்களித்த சொல்லைத் தனது சொல்லென எண்ணிக் காத்து வழங்குகிறாள். அதாவது குடும்பப் புகழைக் காக்கிறாள். இதனை,

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
(56)

என்று வள்ளுவம் விளக்கிக் காட்டுகிறது. இத்தகைய மனையற வாழ்க்கை எளியது போலத் தோன்றுகிறது. ஆனாலும் அந்த மனையறம் வள்ளுவத்தின் வழி சிறக்க அரிய முயற்சிகள் தேவை. இல்வாழ்க்கை பொறுப்புடையது என்கிறார் திருவள்ளுவர். பலரைப் புரந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பை இல்லறம் ஏற்றுக் கொள்ள