பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். அறநெறி அறிந்த மூத்தவராக, உயிர்க்குலம் அனைத்துக்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவராக, அந்தணராக, தென்புலத்தில் வீற்றிருந்து தம் அருள்ஞானப் பெருக்கால் உலகை வாழ்வித்து வரும் அந்தணாளர்க்கு உரியன வழங்குதல் வேண்டும். தெய்வத்தைப் பராவித் தொழுதல் வேண்டும். நாடுவிட்டு நாடு அறிவுச் செலவினும், அருட் செலவினும் பயணிகளாக வரும் புதியவர்களை விருந்தினர்களாக ஏற்றுப் போற்றுதல் வேண்டும். இதுவே விருந்தோம்பல். "இன்று வாடகைக்குத் தங்கும் விடுதிகளும் உணவை விற்கும் சிற்றுண்டி, பேருண்டிச் சாலைகளும் மலிந்துள்ளனவே, இந்த அறம் இன்றைக்கும் பொருந்துமா?" என்று சிலர் கேட்பர். தங்கும் விடுதிகளும் சிற்றுண்டிச் சாலைகளும் வாணிகக்கூடங்களே தவிர அன்புப் பணிமனைகள் அல்லவே! அந்த உண்டிக் கடைகளால் ஒருவர்க்கு உவப்பன செய்ய இயலாதே; உறவு கலத்தலும் நிகழாதே. அதனால் நாட்டுக்கும் நாட்டுக்குமிடையே நிகழ வேண்டிய உறவுகள், உணர்வுப் பரிமாற்றங்களும் நடைபெறா அல்லவா? எந்த ஒரு நிகழ்வும் உணர்வைத் தொடுவதாக அமையவேண்டும். வாணிகக் கடைகள் இலாப நோக்குடையன. ஆங்கு அன்பின் ஆக்கமும் உறவின் வளர்ச்சியும் நாடுகளை இணைக்கும் பாங்கும் வளரா. இல்லத்தில் தலைவியில்லாது போனாலே விருந்தெதிர் கோடல் செய்தற்கியலாது என்ற மரபு, செய்யக் கூடாது என்று மாற்றம் பெற்றுவிட்டது. ஏன்? அகங்கனிந்த உணர்வால் அந்த விருந்தினை ஏற்றுப் போற்ற முடியாது என்பது தானே பொருள். உணவுக் கடைகள் விற்பனையே செய்கின்றன. அதை விருந்தோம்பலோடு ஒத்துப்பார்க்க முடியாது. ஆதலால் விருந்தோம்புதல் என்ற விழுமிய பண்பு வளர்ந்தேயாகவேண்டும்.

இவை மட்டுமா, இல்லறத்தாரின் பொறுப்பு? மேலும் வள்ளுவம் வகுத்துக் கூறுகிறது.