பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

நிறுவனர் : அருள்நெறித் திருக்கூட்டம் : அடிகளார் தொடங்கிய இந்த இயக்கம் தமிழ்ச்சைவ உலகில் புத்தார்வத்தையும், புத்துணர்ச்சியையும், புத்தெழுச்சியையும் உண்டாக்கியது. சிற்றூர்களில், பேரூர்களில் கிளைகள் முகிழ்த்தன. திருமுறைகள் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றன. ஊர்தோறும், திருக்கோயில் தோறும் உழவாரப்பணி ஊக்குவிக்கப் பெற்றன. நாள்வழிபாடு ஒழுங்கு செய்யப்பெற்றது. வார வழிபாட்டுக்கூட்டம் வளர்ந்தோங்கியது.

தெய்விகப் பேரவை : தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் வழி தொடங்கப் பெற்ற இந்த அமைப்பு பேரியக்கமாகப் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தது. சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இறைஉணர்வு நாளும் பெருக நல்லதொரு இயக்கமாக வளர்ந்தது.

திருக்குறள் பேரவை : தமிழ்மாமுனிவர் தோற்றுவித்த அமைப்புக்களில் இன்றும் இளமை குன்றாது மாநாடுகள் நடத்திவரும் பேரியக்கம் இது. தமிழறிந்தோர் எல்லோரும் திருக்குறள் அறிந்திடுதல் வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கருத்தரங்கு நடைபெறுதல் வேண்டும். ஆண்டுதோறும் மாநில மாநாடுகள் நடத்துதல், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் திருக்குறள் மாநாடு நடத்துதல் முதலியன இதன் செயல்திட்டங்கள்.

திருக்குறளைத் தேசியநூல் எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று அடிகளார் எழுப்பிய குரல் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது.