பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 131


வசதியுடையவர்கள் பக்கலில் தோன்றவில்லை. நாட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேரும் கூட்டுறவாளர்களாக மாறினால் தானே கூட்டுறவு இயக்கம் மக்கள் இயக்கமாக முடியும்! ஏழை மக்களின் வரியில் கல்வி கற்றுப் பதவிக்கு வருபவர்கள் திரும்ப அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுகிறார்கள். கடமை என்ற சொல் கடன் என்ற சொல்லிலிருந்துதான் வந்தது. வாங்கும் ஊதியத்திற்கு ஏதோ என் வேலையைச் செய்தேன் என்றிருப்பது கடன் செலுத்தியது ஆகாது. ஏழை உழைப்பாளிகள், உழைப்பால் படைத்த பொருள்களைச் சுவைத்து மகிழ்கிறவர்கள் அது போலத் தம்முடைய உழைப்பால் அந்த ஏழை மக்களின் மனம் மகிழத்தக்க ஒன்றைப் படைத்து வழங்கும் பொழுது தான் அறநெறியின் அடிப்படையில் கடன் நிறைவு பெறுகிறது. இன்று இந்த மனப்போக்கு எங்கிருக்கிறது: வசதியற்ற, பின்தங்கிய மக்கள் நல்வாழ்வுக்காகத் துணிவுடன் கூட்டுறவுகளைத் தொடங்கி, அவர்களின் நல்வாழ்க்கைக்குத் துணை செய்வதற்கு வசதியுடைய சமுதாயத்திற்கு மன மில்லை, எங்கே, எதிலிருந்து ஆபத்து வந்துவிடுமோ? என்று பயப்படுகிறார்கள். செயல் முனைப்பு இல்லை. கோழைத்தன மான தற்காப்புணர்ச்சி தான் இருக்கிறது. ஒரு சிலர் துணிந்து கூட்டுறவு இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கூட்டுறவுத் தத்துவங்களை முழுமையாகச் செயற்படுத்துவதில்லை. அவர்கள் பெற்றிருக்கிற பல்வேறு பதவிகளின் வரிசையில் இதுவும் ஒன்று. அவர்கள் ஒரு "தனிக் கடை" நடத்துகிறார்கள். ஆனால் கூட்டுறவு என்று பெயர். நாட்டிலுள்ள எல்லாக் கூட்டுறவுகளும் இந்த நிலையின என்று கூறவில்லை. சிறந்த கூட்டுறவு நிறுவனங்களும் உள்ளன. அந்தக் கூட்டுறவு நிறுவனங்களில் பங்கேற்று உழைப்பவர்களைப் பாராட்டுகின்றோம். கூட்டுறவு வாழ்க்கையில் ஒரு மனிதன் வெற்றி பெற்று விடுவானானால் அவன் அகநிலையிலும் புறநிலையிலும் நல்ல வளர்ச்சி