பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 133


ஆணை. குடி செய்து வாழ்கின்ற வாழ்க்கை புகழ்மிக்க வாழ்க்கை. தமிழ்க் குடியினருக்கு இந்தப் பண்பு வழக்கமாகக் குறைவு. தமிழ்க் குடியினர் குடியைக் காப்பதிலும் குடி மேம்பாட்டுக்குரியன செய்தலிலும் அடிக்கடி சோர்வுபட்டுக் குடி செய்தலுக்கு மாறாகத் தம்முள் குழுக்கள் அமைத்துக்கொண்டு போராடி நிறைதமிழ்க்குடியின் புகழ் பூத்த வாழ்க்கையை இழக்கச் செய்திருக்கின்றனர். தாம் பிறந்த குடியின் மேம்பாட்டுக்குரிய பணிகளைச் செய்வதில் பருவம் முதலிய பார்த்து நாள்களைத் தள்ளக் கூடாது. குடி செய்தற்குரிய பணியைச் சோம்பல் காரணமாக "இன்று" "நாளை” என்று கடத்தக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, மான அவமான உணர்ச்சிகளுக்கு ஆளாகித் தம்முடைய குடியைச் சார்ந்தவர்களிடத்தில் பகை பாராட்டி ஒதுங்குதல் கூடாது; ஒழிக்கும் முயற்சியும் கூடாது. தாம் பிறந்த குடியின் மேம்பாட்டுக்காகத் தம்முடைய மானமே பெரிதென்று கருதாமல் இனமானம், குடிமானம் காத்துத் தம்மைப் பழித்துரைத்தாரிடத்தும் பகைபாராட்டாது அன்பு பாராட்டி உறவு கொண்டு குடி சிதறாமல் காக்கவேண்டும்.

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்" (1028)

என்பது திருக்குறள். இந்தத் திருக்குறளுக்கு மிகப்பலர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒருவர்தாம் வள்ளுவத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வாழ்க்கை விளக்கத்தில் உரை கண்டவர். அந்த அற்புதமான மனிதர் நம்முடைய காலத்தில் வாழ்ந்தவர். அவருக்குத் தமிழ் மூச்சு:; தமிழ் இனம் அவருடைய சுற்றம். தமிழ் இனத்தின் பாதுகாப்புக்காக, முன்னேற்றத்திற்காகப் பணி செய்த ஒரியக்கத்தில் தலைவருக்குக் கட்டுப்பட்டுப் பணி செய்தவர். இடையில் தவிர்க்க முடியாமற் பிரிவு தோன்றியது. பிரிந்தவர் சோர்ந்து போகாமல் பேரியக்கம் கண்டார். பிரிவதற்குக் காரணமாக இருந்தவர்கள் பிரிந்த இப்பெருமகனாரை இழித்தும் பழித்தும் பலப்பல பேசினார்கள். அம்மம்ம அவர்களின் ஏச்சுக்கு