பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 135


நல்லவர்களாக இருப்பவர்கள் எதிர்பாராமல் கெட்டுப் போதலும் உண்டு. கெட்டவர்கள் எதிர்பாராமல் நல்லவர் களாக மாறி வளர்வதும் உண்டு. முன்னையதுதான் பெரும் பான்மை, உருவங்களை வைத்து மக்களை மக்கள் நம்பக் கூடாது. ஆம்! சிலர் மனிதர்களாகத்தான் நடமாடுகிறார்கள்! ஆனாலும் மக்கள் நன்மையுடையவராக அல்லாமல் பசுத்தோல் போர்த்த புலியென நடமாடுபவர்களும் உண்டு. திருவள்ளுவர் சிரிக்கவும் சிந்தனை செய்யவும் தக்கவகையில்,

"மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்"

(1071)

என்று கூறியிருப்பதை ஒர்க. சந்தையில் வாங்கப்படும் விலங்குகள், காய்கள் தோற்றத்தைப்போலவே அவற்றின் பண்பும் இருக்கும்; ஆனால் கயவர் மேற்கொள்ளும் வாழ்க்கையில் தோற்றத்திற்கும் நடப்பிற்கும், சொல்லுக்கும் செயலுக்கும் யாதொரு இயைபும் இருக்காது, ஒரோவழி நாம் பழகியவர்களே, இத்தகைய கொடுமை யுடையவர்களாக மாறி நமக்குத் தீங்கு விளைவித்தால் என்ன செய்வது? நஞ்சைக் கொடுக்கிறார்கள். அந்த நஞ்சையும் கூட மனவேறுபாடின்றி வாங்கிக் குடித்தால் மரணம் வாராது. நஞ்சு கொடுத்த நண்பனும் கூட நாணமுற்றுத் திருந்துவான். அத்தகைய உயர்ந்த நாகரிகப் பண்பு மனித குலத்தில் வளர வேண்டுமென்பது வள்ளுவத்தின் இலட்சியம்.

"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்".

(580)

பகை கொள்வதற்கும் பிரிவதற்கும் வாய்ப்பில்லாமற் போகாது. அந்த வாய்ப்புக்களையும் கடந்து அன்பை, உறவைக் கட்டிக் காப்பாற்றுவதுதான் நாகரிகம். அத்தகைய நாகரிகப் பண்பு மனித குலத்தில் வளருமானால் மனிதன் மனிதனோடு போராட மாட்டான். போரற்ற சமாதான உலகம் தோன்றும். மனித சக்திகள் முழுதும் பொருள், கலைப்