பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிவியல் உணர்வோடு அணுகப்பெற்றன. அறிவியல் பாங்கில் அடித்தளமும் அமைக்கப் பெற்றது. உலகு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞாயிறு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உலக இயக்கத்தில் அடிப்படை உறுப்புகளாக அமைந்துள்ளன எவை? எவை? உலக இயக்கத்தால் அந்த உறுப்புகள் அடையும் பயன் என்ன? என்று ஆராய்ந்தறிதல் சமயத்தின் இயல்பாக அமைந்தது. உலகில் படைக்கப் பெறாமல், என்றும் உளவாகத் தாமே இயல்பியல் அமைந்த பொருள்கள் மூன்று. அவற்றுள் பொருள்கள் இரண்டு; பொருளின் தன்மை ஒன்று. இம்மூன்றும் யாவை? ஒன்று கடவுள்; மற்றொன்று உயிர்; பிறிதொன்று உயிரைப் பிணைத்துள்ள அறியாமை. இவை மூன்றும் படைக்கப் பட்டனவுமல்ல; தோன்றியனவுமல்ல; அழியக் கூடியனவு மல்ல.

"பதிபசு, பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல்பசு பாசம் அனாதி”

(திருமந்திரம் 1 : 159)

இது தமிழினத்தின் மெய்யறிவுக் கொள்கை.

இம்மூன்று பொருள்களும் என்றும் உன் பொருள்கள் என்பது வள்ளுவர் கொள்கை. கடவுள் பிறப்பிறப்பில்லாதவன் என்பதனை உணர்த்த அவன் பிறவிக்கடல் நீந்துவதற்குத் துணையானவன் என்று வள்ளுவர் விளக்குகிறார். மேலும் தனக்கு உவமை இல்லாதான்', 'எண்குணத்தான்', 'பொருள் சேர் புகழுடையான்' என்றெல்லாம் கூறுவதால் கடவுள் என்றும் உள்ள பொருள். அவனுடைய தனக்குவமையில்லாத் தகுதியும், குணமும், புகழும் இயல்பாய் அமைந்தவை. இவை மட்டுமன்றித் தன்னைச் சார்ந்தாரின் மனக் கவலையையும் மாற்றுவான்.

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது".

(7)