பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 163


யுடைய இந்தப் பொதுவுடைமைத் தத்துவம் உலகில் ஐந்தில் ஒரு பகுதி மக்களைக் கவர்ந்திருக்கிறது; ஆட்சியில் அமர்ந் துள்ளது. இந்திய நாட்டிலும் கூட மத ஆசாரங்களுக்கும் மந்திரங்களுக்கும் பெயர் போன கேரளத்தை இக்கொள்கை பெரிதும் கவர்ந்திருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் சமய உலகத்திற்குப் புத்தொளி காட்டிய இராமகிருட்டிணர் விவேகானந்தர் முதலியோர் தோன்றி விளங்கிய மேற்கு வங்கத்திலும் இக்கொள்கை பெருவாரியாக வளர்ந்துள்ளது. அக்கொள் கையை ஏற்பளித்து வாக்களித்துள்ளனர். இவையெல்லாம் கடவுள் உண்டு என்பார் நினைவிற்கொள்ள வேண்டிய வரலாற்றுச் செய்திகள். மக்கள் மன்றத்தில் நிகழும் வரலாற்று நிகழ்வுகள், தத்துவங்கள், கொள்கைகள் தோன்றுதலுக்கும் மாறுதலுக்கும் அல்லது மறைதலுக்கும் அடிப்படையாக அமையும் என்பதை மறந்து விடுதல் கூடாது. இன்றைய நிகழ்வுகள், நேற்றைய வரலாற்றில் வாழ்ந்தவர்களின். தகுதிப்பாட்டினை இயம்புகின்றன. இன்றைய நிகழ்வுகள் எதிர்வரும் வரலாற்றுக்கு உந்துசக்திகள். எதிலிருந்தும் ஒதுங்கி வாழலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகள் அவற்றின் பின் நிகழ்வுகள் இவைகளிலிருந்து ஒதுங்கி வாழலாம்; தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அதைவிடப் புத்திசாலித்தனக் குறைவானது வேறொன்றுமில்லை. அது நிற்க, கடவுள் உண்டா? இல்லையா? தெளிவான அறிவு பூர்வமாக உறுதிப்படுத்தக் கூடிய விடையை யாரால் கூற முடியும்? உண்டு என்பார்களும் கண்டு காட்டவில்லை. நம்பிக்கை அடிப் படையிலேயே உண்டு என்கின்றனர். அல்லது, தர்க்கவியல் அடிப்படையில் விவாதித்துச் செல்லும்போது விவாதங்கள், படுக்கும் எல்லையில், அதைக் கடந்து நிற்பதாகக் கூறுகின்றனர். அது ஒருபுறம் இருக்க, இல்லையென்பவர்கள் தாம் எங்கே பார்த்து, எவ்வழிப் பார்த்து இல்லையென்று கூறுகின்றனர். உலகம் விரிந்தது; பரந்தது; பருமையுடையது; நுண்மையுடையது. ஓர் அணுவிற்குள் ஓராயிரம் கோள்கள்