பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


(நுண்அணுக்கள்) நெருங்கிக் கிடக்கின்றன என்று விஞ்ஞானம் கூறுகிறது. கண்ணுக்குப் புலனாகாத ஓரணுவில் ஆயிரக்கணக்கான அணுத்திரள்கள்; அவற்றிற்கு ஆற்றல் இருப்பதாக அணு அறிவியல் கூறுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சிந்தனை எல்லைக்கும், செவிப்புலன் எல்லைக்கும் பாடல்கள் வாயிலாக வந்த நிலவை எட்டிப் பிடிக்கவே இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடவுள் நம்பிக்கையுடையவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லும் இலக்கணத்தைப் பார்த்தால் அதனை ஆராய்ந்து அறிந்து 'உண்டு' அல்லது 'இல்லை'யென்று எளிதில் கூற இயலாது. "ஐயா, என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்” என்பது திருவாசகம். இந்த இலக்கணத்தின்படி வானியல், நிலத்தடியியல் உயிரியல் அனைத்தும் கடைபோக ஆராய்ந்து முடிவுகளைக் கண்ட பிறகுதான் இல்லையென்று கூறுவதை அவர்கள் உறுதிப்படுத்த முடியும். அதற்குரிய அறிவாற்றலை, தகுதியை இன்னும் மானிட சாதி பெறவில்லை. ஆதலால் இங்கொருவர் அங்கொருவர், தாம் அறியாததனாலோ வாழ்க்கையில் ஏற்பட்ட அதிருப்தியாலோ இல்லையென்று கூறியதை நம்பக்கூடாது. கடவுள் இல்லையென்று கூறுவோரில் பெரும்பான்மையோர் உலகியலில் பொருளியலில் உயிர் இயலில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் காட்டி இம்முரண்பாடுகளுக்குக் காரணமாக உள்ள பொருள், கடவுளாக, இருக்க முடியாது என்று கூறி மறுக்கின்றனர். இந்தக் கருத்து கடவுள் உயிர்களைப் படைத்தார் அல்லது தோற்றுவித்தார் என்ற கொள்கை யுடைய வளர்ச்சி பெறாத சமயங்களைச் சார்ந்த பிழையான கருத்தால் தோன்றியதாலும், திருவள்ளுவரின் சமயம் உயிர் ஒரு படைப்புப் பொருளன்று, உயிர் இயற்கையாகவே உள்பொருள் என்று கூறுவதால் இந்தக் கொள்கைத் தோற்றத்திற்குரிய களமே இல்லாமல் போகிறது. கார்ல் மார்க்ஸ் கடவுளை மறுப்பதற்குக் காரணம் கடவுள் நம்பிக்கையுடைய ஒரு சில சமயத்தினர் உயிரின் இயல்பினை -ஆற்றலை-