பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 165


சுதந்தரத்தை மறுத்து உயிர் அப்பட்டமான மையொட்டித் தாள் அல்லது கடவுளின் உயிருள்ள ஒரு விளையாட்டுப் பொம்மை என்று கூறுவதேயாகும். திருவள்ளுவர், உயிரின் திறனையும் அறிவுப்பாங்கினையும் ஆள்வினைத்திறனையும் ஐயத்திற்கிடமின்றி விளக்குவதால் அதற்கும் இடமில்லை. அது மட்டுமன்று. வள்ளுவம் காட்டும் கடவுள் 'வாலறிவ'னேதவிர ஆதிக்க சக்திகளின் தலைவனல்லன். அவன், வழி நடத்துபவனே தவிர, ஆட்டிப்படைப்பவ னல்லன்; அவன் கையூட்டுகளைப் பெற்றுக்கொண்டு, கையூட்டு வழங்கியவர்களுக்குச் செல்வத்தையும் துறக்கத் தையும் வழங்குபவனல்லன்; கையூட்டுத் தரமாட்டாதாரை ஒதுக்குபவனுமல்லன். வள்ளுவம் காட்டும் கடவுள், தூய்மை யான அறிவேயாம். தனக்குவமையில்லாத தன்மையேயாம். எண் குணங்களின் உருவமேயாம். அஃது ஒரு பண்பு. அஃது ஒரு குணம். அந்தத் தன்மையை - பண்பை - குணத்தைத் திரும்பத் திரும்ப உயிர் நினைத்தலின் மூலம் அத்தன்மை களையெல்லாம் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு வளரும் நெறிதான் வழிபாட்டு நெறி, வழிப்படுதல் (வழிப்படுதல் - வழிநிலை நிற்றல்) என்பது மருவி வழிபாடானது. ஆனால் அகத்தொடு தொடர்பில்லாத பொறிகள் மட்டும் தொழிற்படும் வழிபாடும், அதற்குக்கூட வாய்ப்பில்லாத தரகர் முறை வழிபாடும் நாட்டில் மலிந்தன. சமயத்தின் முறை பிறழ்வு இங்கேதான் தொடங்குகிறது. இம் முறை, பிறழ்வு, முறையாகவளர்ந்து நெடியதூரம் விலகி வந்து இன்று கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கு இடம் கொடுத்துள்ளது. வள்ளுவம் கடவுள் வாழ்த்தில்,

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இவ” (4)
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்” (6)
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது” (8)