பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படைக்கத் தோன்றும் அரசியலுக்குப் பொருளியலே அடிப்படை. அதனால் திருக்குறள் பொருட்பாலில் அரசியல் பேசுகிறது. மனிதன் பிறந்து மொழி பயின்று, கலைஞானம் கற்று, வாழ்வாங்கு வாழ்ந்து, முழுமையுறுவதற்குப் பொருளே துணை செய்கிறது. அரசியலை முறையாக அறிந்து வளர்ந்த மனிதர்களே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கமுடியும். அறிவியலில், பொருளியலில், அரசியலில் முறையாக வளர்ந்த மனிதர்களே சமயத்துறையிலும் சிறந்து விளங்க முடியும்; மனிதகுலம் நன்னிலையடையும். ஆதலால் “அரசியல் ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ளத்தக்கது; எல்லார்க்கும் உரியதன்று” என்பது திருவள்ளுவருக்கு உடன்பாடன்று. வள்ளுவர் அரசியலை ஓர் வாழ்வியலாகக் கருதி, அதற்குச் சமுதாய அறத்தை ஆதாரமாக அமைத்தார். தற்கால அரசியலாசிரியர்கள் கருத்தும் இதுவே, ஆகையால் வாழ்வியலில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் அரசியல் உரியது. பொதுவானது, அரசாங்கத்தில் தமக்குள்ள உரிமை, பங்கு கடமை, மற்றவர்களோடு உள்ள தொடர்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதற்கு வாழ்வியலாகிய இன்று அரசியலே வழிகாட்டி.

அறம் என்பது மனித வாழ்வில் தீமைகளை அகற்றித் துன்பங்களை விலக்கி இன்பத்தைத் தருவது. இந்த அறநெறி மனித வாழ்வின் படிப்பினைகளிலிருந்தே தோன்றி வரலாற் றுக்கு வளமூட்டுகிறது, இந்த அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது; தொண்டு செய்கிறது. அரசியல் தத்துவங்கள் மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. சிறந்த அரசியல் நிலவும் நாட்டில் ஒழுங்குகள் நிலவும்; ஒழுக்கங்கள் விளங்கித் தோன்றும்; அமைதி நிலவும்; வாழ்க்கையின் துய்ப்புக்குரியன அனைத்தும் எளிதில் கிடைக்கும்; அறிவுத்துறை மேம்பட்டு விளக்கமுறும், ஆங்குப் பகை ஒடுங்கிப் பண்பாடு விளங்கும். அரசியலின் பயன்