பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசின் தலைவன் முடிமன்னனே. திருக்குறள் அரசனை ஏற்றுக் கொண்டாலும், மற்ற நாடுகள் அரசனை ஏற்றுக்கொண்ட முறைக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உலக நாடுகளில், அரசனைக் கடவுளின் பிரதிநிதி என்றும், அரசனின் உரிமை கடவுளால் வழங்கப்பெற்றது என்றும், அவனுடைய ஆணை கடவுளின் ஆணை என்றும் நம்பிய நாடுகள் உண்டு. இங்கிலாந்து நாட்டில் (Divine Theory of Right) சிறப்பான இடம் பெற்றதால் ஏற்பட்ட அரசியல் கலகங்கள் நினைவிற் கொள்ளத்தக்க நிகழ்ச்சிகளாகும். திருக்குறள் அரசனைக் கடவுளின் பிரதிநிதி என்று நம்பவுமில்லை; ஏற்றுக் கொள்ளவுமில்லை.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” (386)

என்று திருக்குறள் பேசுகிறது. இத்திருக்குறளை அணுகி நோக்குபவர்க்கு அரசனை இறைவன் என்று போற்றுதல் திருவள்ளுவருக்கு உடன்பாடு இல்லை. "இறையென்று வைக்கப்படும்” என்பது ஒரு உபசார வழக்கேயாம். செங்கோன்மையின் காரணமாக இறை இடத்தில் மக்களால் வைக்கப்பெற்றுப் போற்றப்படுதல் என்பதே கருத்து. குடிமக்கள் அரசை அவாவித் தழுவி வாழவேண்டும் என்ற நிலையில்தான் பல அரசுகள் விளங்கின. விளங்குகின்றன. அரசை மக்கள் தழுவி வாழவேண்டியதில்லை; அரசுதான் மக்களைத் தழுவி நிற்கவேண்டும் என்று வள்ளுவம் வழி நடத்துகிறது. அரசை மக்கள் தழுவி வாழும் நெறி சிறந்த அரசியல் நெறியாகாது. அரசைத் தழுவி வாழ்ந்தால்தான் வாழ்வு நடக்கும் என்றால் அது. கொடுங்கோன்மை. குடிமக்களைத் தழுவி நிற்கும் அரசில், மக்கள் உரிமையுடையவர்கள். மக்கள் நலனை அரசு நாளும் போற்றுகிறது; வளர்க்கிறது: . பாதுகாக்கிறது. ஆங்குப் பொதுமை நிலவும்; செங்கோன்மையும் நடுவு நிலையும்