பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 177


உடைய நல்லாட்சி அமையும். ஆட்சியைத் தக்க அமைச்சர்களின் ஆலோசனைப்படி பெரியோரின் துணைகொண்டும் பெருமைக்குரியவாறு ஆட்சியை நடத்தவேண்டும். இது வள்ளுவம் ஆட்சிக்கு அமைத்த இரண்டு பாதுகாப்பு ஆகும். அரசை -- அரசின் நடைமுறைகளை விமர்சனம் செய்ய வள்ளுவம் உரிமை வழங்குகிறது. அரசின் தவறுகளை எடுத்துக் கடிந்து கூறத்தக்க அமைச்சர்களைப் பெறாது போனால் அந்த அரசு பகைவரின்றியே அழியும் என்றும் கூறுகின்றது.

"இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.” (448)

ஆம். இடித்துக் கூறுதல் என்பது தடம்புரண்ட ஆட்சியாளரைத் தடுத்து நிறுத்தி உரிய தடத்திற் செலுத்து வதேயாகும். அங்ஙனம் எடுத்துக்கூறுதல் செவிக்குச் சுவையில்லாமல் இருக்கலாம். ஆயினும் ஆட்சியாளர்கள் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அப்படித் தாங்கினால் தான் தரணியைத் தாங்கி ஆட்சி நடத்த இயலும் என்பது வள்ளுவத்தின் அரசியல் முடிவு.

"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை
வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு" (389)

என்பது திருக்குறள், ஏன்? முறையாக நடைபெறாத ஆட்சியை மாற்றலாம்; மாற்றமுடியும்; ஆட்சியாளர்கள் ஆட்சியை இழப்பர் என்று திருக்குறள் அரசியல் ஆட்சி மாற்றத்திற்குரிய உரிமையையும் வழங்குகிறது.

"கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு". (554)

வள்ளுவம் காட்டும் அரசு, குடியாட்சி தழுவிய முடியாட்சியாகும். இங்கிலாந்து நாட்டில் இன்று நிலவும் குடியாட்சி முறை தழுவிய முடியாட்சியை நினைவில்