பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெறிமுறைப்படி அமையாத அரசுக்கு நாட்டு மக்களின் ஒழுக்கக் கேடுகளுக்குத் தண்டனைகள் விதிக்கும் சட்டங்களை இயற்ற உரிமை இல்லை; தண்டனைகள் வழங்க உரிமையில்லை. அப்படியே அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்தால் அரசு கெடும். இது திருக்குறள் காட்டும் அரசியல் நெறியின் சிறப்பு. குடிமக்களிடத்தில் ஒழுக்கக்கேடுகள் தோன்றுதலுக்கேற்ற நெறி பிறழ்ந்த ஆட்சிமுறை என்று ஆட்சித்தலைவர் அறிந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் இருக்குமானால் அரசு முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் ஒழுக்கநெறி வளரும். அரசும் அரசாக இருக்கும். அரசு தண்டனைகள் வழங்கு வதற்கு முன்பு குடிமக்களுடைய வாழ்க்கை உரிமைகளை வழங்கவேண்டும். ஒரோவழி அரசின் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தாமல் வரையறைகளை மீறி ஒழுக்க மில்லாதவனாக ஒருவன் நடந்து கொண்டாலும் அவன் அழியத்தக்க வகையில் தண்டித்தல் கூடாது. தண்டனை அழித்தலுக்கல்ல; திருத்தப்பாட்டினையே நோக்கமாகக் கொண்டது. குற்றங்களுக்குரிய தண்டனைகள் வழங்குதலில் மனிதர்களுக்கிடையில் வேறுபாடு காட்டக்கூடாது; ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற அநீதி திருக்குறள் ஏற்றுக் கொள்ளாத ஒன்று. அரசு வழங்கும் தண்டனை அச்சத்தைத் தோற்றுவிக்க வேண்டும்; ஆனால் அழித்துவிடக்கூடாது என்று குறள் கூறுகிறது.

“கடிதோச்சி மெல்ல எறிக; நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்" (562)

என்று நயம்படக் கூறுவார்.

யாதொன்றுக்கும் தகுதியில்லாத கயவரைக்கூடத் திருவள்ளுவர் அழிக்கச் சொல்லவில்லை. கொல்வதை ஒத்த துன்பங்களைத் தந்து அவர்களைத் திருத்திப் பயன்படுத்த வேண்டும், என்பதே வள்ளுவத்தின் நோக்கம். இது,