பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 201


வினைத் திறமுடைய தலைவன் இல்லாவிடில் அரணின் பயன் முழுமையுறாது என்றும் கூறுகிறது.

ஆட்சிக்கு அமைச்சரவை இன்றியமையாதது. ஏன்? தனி மனிதன் ஒருவன், நுண்ணறிவுடையவனாகவும் செயல்திறம் மிக்கவனாகவும் இருந்தால் ஆட்சிக்குப் போதாதா? போதாது. ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளைக் கடமைகளை நிறைவேற்ற ஆட்சியை எதிர் நோக்கிவரும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண எவ்வளவுதான் சிறந்த துண்ணறிவுடையவனாக இருந்தாலும் ஒருவனின் அறிவு மட்டும் அதுவும் சிறப்பாகப் பட்டறிவு மட்டும் போதாது: அதோடு இன்ப, துன்பங்கள் வழி அலைக்கப்படும் போது, தனி மனிதனின் அறிவு சோர்வுபடும். பாண்டியன் நெடுஞ்செழியனின் அறிவு கோப்பெருந்தேவியின் ஊடல் காரணமாகச் சோர்வுபட்டதை ஒர்க. அதனாலன்றோ வள்ளுவம் "பொச்சாவாமை" என்னும் ஓர் அதிகாரம் பேசுகிறது. நேரடியாக இன்ப, துன்பங்களால் தாக்கப்படாமல் இருப்பவர்களுக்கு அறிவு சோர்வுபடுவதற்கு வாய்ப்பில்லை. அதோடு ஆட்சியின் பல்வேறு துறைகளை நுணுகி ஆராய்ந்தறிய.ஒருவருக்குப் போதிய காலம் இராது. ஆதலால் ஒரு நேரத்தில் பலதுறைச் சிந்தனையும் பன்முகப் பணியும் நடைபெற அமைச்சரவை தேவை. வள்ளுவம் காட்டும் அமைச்சரவை சிறப்புடையது. வள்ளுவத்தின் வழியில் அமைச்சரவை அமைந்து செயற்படின் நாட்டுக்கு யாதொரு குறையும் வாராது. அமைச்சராய் அமைவோர்க்கு இயற்கையான நுண்ணறிவு தேவை; நூலறிவும் தேவை.
"மதிநுட்பம் நூலோ டுடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை" (636)

இத்திருக்குறளில் மதிநுட்பத்தை முதன்மைப் படுத்தியிருத்தல் சிறப்பு. நுண்ணறிவு நூலறிவையும் திரிபிலாது பெறுதற்குத் துணை செய்யும். ஒரோவழி நூல்கள் கூறும் வழி