பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 205


இதுவே நட்பின் நோக்கம்; கடமை. சிரித்துப் பேசி மகிழ்வது நட்பின் நோக்கமன்று, இதனைப் "புணர்ச்சி பழகுதல் வேண்டா" என்று கூறிக்காட்டுவார். "உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்" என்று நட்பு அகநிலை வளர்ச்சிக்கு உறுப்பாம் என்பதை உணர்த்துகிறார். இன்று பேசிப் பழகாது போனால் நட்பில்லையென்றும் குறைந்த அளவு கடிதங்கள் பரிமாற்றம் இல்லாது போனாலும் நட்பே இல்லையென்றும் கருதப்பெறுகிறது. ஒருவன் உணர்ச்சிக்கு, அவ்வுணர்ச்சியின் வழிப்பட்ட இலட்சியங்களுக்கு ஒருவரை ஒருவர் அறியாமலே பழகாமலே துணையாய் அமையமுடியும்; நல்வழியில் அமைந்தும் ஆக்கம் தரமுடியும்; அயல்வழிச் செல்லாமலும் தடுக்க முடியும். அங்ங்ணம் அமைவதே சிறந்த நட்பு. கோப்பெருஞ் சோழன்-பிசிராந்தையார் நட்பை எண்ணிப் பார்ப்போமாக, யாதொரு நேரிடைத் தொடர்பும் பழக்கமும் இல்லாத அவர்கள் நட்பின் மாட்சிமை என்ன? உயிரில் கலந்த, உணர்வுடைய, உயிர் நட்பாக விளங்கியது. இன்றோ அத்தகைய சிறப்புடைய நட்பு அமையாமல் சமுதாயம் துன்புறுகிறது. எங்கும் வன்கண்மையும், புறம்பேசுதலும், காட்டிக்கொடுத்தலும் ஆகிய நட்பின் தன்மைக்கு மாறான செயல்கள் நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஏதிலான் ஆரத் - தமர் பசிப்பச் செய்யும் பழி வினைகள் மலிந்து வருகின்றன. இது வளர்ச்சியை அவாவி நிற்கும் சமுதாயத்திற்கு நன்றன்று. நேற்று நட்பு இன்று பகை என்றால் நட்பின் இலக்கணமும் நடை முறையில் இல்லை. பகைத்திறம் தெளியும் தெளிவும் இல்லை என்பது தானே பொருள்? சிறந்த நட்பு வளரும் தன்மையது. நட்பிற்காக நட்பு - இதுவே நட்பின் இலக்கணம். உயர் இலட்சியத்திற்காக நட்பு; நட்பு உதவி பெறுவதற்கன்று; நட்பு உதவி செய்வதற்கு; துணைதேடிப் பெறுவது நட்பல்ல; 'துணையாக அமையத் துடிப்பது நட்பு'. இத்தகு நட்பு நெறி நாளும் வளரும்; நட்பின் திறன் வளரும்; இன்பம் மலரும்; வரலாறு சிறக்கும். சிறந்த