பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 213


நல்லகுடிமக்கள் நாட்டில் சிறந்து விளங்கினால் வழிவழியாக அந்தப் பண்பாடு சிறந்து விளக்கமுற்று வளர்ந்துவரும்.

திருக்குறளுக்குச் சாதிமுறை உடன்பாடன்று. சாதிமுறை அயல்வழக்கு. சாதி முறையில் பிறப்பே ஆட்சி செய்யும். பிறப்பே சாதிமுறையை உறுதிப்படுத்தும். அந்நெறியல்லா முறைப்படி இழிவாகப் பிறந்தவனானாலும் அவன் கல்வி கேள்விகளால் மாறி வளரும் வளர்ச்சியைச் சாதிமுறை ஏற்பதில்லை; இல்லை. அங்ஙனம் பிறந்தவர்கள் கல்வி கேள்வி பெறுவதற்குரிய உரிமையும் பெறமாட்டார்கள். இந்தக் கொடுமையான, வள்ளுவத்திற்கு முரணான சாதி முறைகள் தாம் பிற்காலத் தமிழகத்தை நிலை அழியச் செய்தன; இன்றும் அழித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதிமுறைகள் வள்ளுவத்திற்கு முற்றாக உடன்பாடில்லை. ஆனால் குடி, குலம் ஆகியவற்றில் வள்ளுவம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இன்றைய மனிதஇயல் விஞ்ஞான நுண்ணறிவும்கூட குடி, குலம் ஆகியவற்றின் வழி இயல்பில் அமையும் சில திறன்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் இது தேக்கமுடைய மனப்போக்கு அல்ல. வளர்ச்சிக்குச் சில தலைமுறைகள் ஆகும் என்பதே இந்த விஞ்ஞானக் கருத்தின் முடிவு. சிறந்த பெற்றோர்களுக்குப் பிறந்து சிறந்து சுற்றச் சூழலில் வளரும் குழந்தைகள் சில நல்வியல்புகளை எளிதில் பெறுவர். இது குல அமைப்பு.

“.............................பெறுதற்கரியதம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்"

                            (கம்ப, நாட்டு.38)

என்று கம்பனும் கூறுவான். குடி அதனினும் விரிந்தது. அதுமொழிவழிப்பட்ட ஒரு நாட்டு வழிப்பட்ட சூழலைக் குறிப்பது. அக்குடிமக்களின் சீலங்கள் எளிதில் அடுத்த தலைமுறையினருக்குக் கிடைக்கும் என்ற படிப்பினையைக் குடிமை என்ற அதிகாரத்தில் திருக்குறள் விரித்துக்கூறுகிறது.