பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவள்ளுவரும் "யாண்டும் இடும்பை இல" என்று பேசுகின்றார்.

ஆதலால் வாழ்க்கையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வேண்டுதல் வேண்டாமை பாராட்டுவது சமய ஒழுக்கமாக மாட்டாது. வேற்றுமைகளைக் கடந்த விழுமிய மனித குல ஒருமைப்பாடே சமய உலகத்தின் நியதி. ஆதலால், அன்றாட வாழ்க்கையில், இந்தச் சமய சமுதாய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து உய்தி பெறுவோமாக!

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”.


வானும் ஒழுக்கமும்

திருவள்ளுவர் மனித குலத்தின் ஒழுக்க நெறியை உயர்த்த நூல் செய்தவர். அவர் செய்த திருக்குறள் ஒரு முழு ஒழுக்க நூல். பல்வேறு வகையான துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் உரிய இயல்பான ஒழுக்கத்தை வலியுறுத்தி உள்ளார். ஆனாலும் திருவள்ளுவர் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும்பொழுது நாட்டின் நடைமுறையை யதார்த்த நிலையை மறந்து விட்டு உபதேசிக்கவில்லை. சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்தே சொல்லுகிறார். பொதுவாக ஒழுக்கத்தைப்பற்றி உபதேசிப்பது எளிமையானதொன்று. ஆனாலும், அதைத் தன் வாழ்வில் கடைப்பிடிப்பதும், மற்றவர் கடைப்பிடித்து ஒழுகுதற்குரிய முறையில் சூழ்நிலையை உருவாக்குவதும் அவசியமாகும்.

பெரும்பான்மையான மனிதர்கள் இயல்பில் நல்லவர்கள். ஆனாலும் தவறுகள் செய்தற்குக் காரணம் அவர்களின் சூழ்நிலையேயாகும். உதாரணமாகக் களவு, பொய், வெஃகுதல், அழுக்காறு ஆகிய ஒழுக்கக் கேடுகள் மனித குலத்தில் தோன்றிய செயற்கைத் தவறுகளே. ஏன்?