பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மையுடையன என்றே திருவள்ளுவர் கூறுகிறார்.

"மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற." (34)

அறமும் சிவிகையும்

திருவள்ளுவர் முற்போக்கான கருத்துக்களையுடையவர். அவர் சமுதாயத்தின் குணங்களையும் குறைகளையும் நடுநிலை உணர்வோடு விமரிசனம் செய்கிறார். அந்த விமரிசனப் போக்கில் பழமையை ஏற்றுக் கொண்டதும் உண்டு; பழமையைச் சாடியதுமுண்டு.

ஒருவன் பல்லக்கிலே போகிறான். இன்னொருவன் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போகிறான். பல்லக்கில் ஏறிச்செல்பவன் அறம் பணணினான் என்றும், பல்லக்கைத் தூக்கிச் செல்வோன் அறம் செய்யாதவன் என்றும், அதன் பயனாகவே பல்லக்கைச் சுமந்து செல்லுகிறான் என்றும் சொல்லுவது தமிழகத்தின் பழைய பழக்கங்களில் ஒன்று. "அறத்தாறிது என வேண்டா” என்ற இந்தக் குறளுக்குக் கூட அந்தப் பழைய வழக்குப்படியே பலர் பொருள் கொண்டுள்ளார்கள். ஆனால், திருவள்ளுவரின் கருத்து அஃதன்று. திருவள்ளுவர் பல்லக்கில் சவாரி செய்வதையும், பல்லக்கைத் தூக்குவதையும் காரணமாகக்காட்டி, அறத்தாறுதான் இந்த வேற்றுமைக்குக் காரணம் என்று சொல்லாதே என்று சொல்லுகின்றார். "இதுவென வேண்டா" என்ற சொற்றொடர் இந்தப் பொருளையே தருகிறது.

சிவிகை ஊர்தலுக்கும், தூக்குதலுக்கும், அறத்திற்கும் உறவில்லை. காசுக்குத்தான் உறவு. நிறையச் செல்வம் உடையவர்கள் - ஜமீன்தார்கள் - ஜமீன்தாரிணிகள் ஆகியோர் கூலி கொடுத்துத் துரக்கச் செய்து போகிறார்கள். இஃதெப்படி அறமாகும்?