பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 233


வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவன் காரியங்களின் சாதனையைப் பெறுகிறான்; மகிழ்வு கலந்த இன்பமும் பெறுகிறான்; புகழும் பீடு நடையும் பெறுகிறான்; வேண்டிய பொழுது பெய்யும் மழைபோல வேண்டியபொழுது உதவி செய்வாள். அதிலும் நுட்பமிருக்கிறது. வேண்டாத பொழுது மழை பெய்யக்கூடாது. அதுபோலவே கணவன் வேண்டாத பொழுதும் மேவித் துணை செய்யக்கூடாது. அங்ஙனம் செய்யப்புகின் அடக்கமின்மையாகவும், தன் முனைப்பாகவும் கருதப்பெற்று உறவு கெடும். ஆதலால் "பெய்யெனப் பெய்யும் மழை" யென்ற சொற்றொடர், சிந்தனைக்கு இன்பம் தருவது. வேண்டியபொழுது காலந் தாழ்த்தாமலும் உடனடியாகப் பெய்யும் மழையும் சிறப்புக்குரியது. அது போலவே கணவனுக்கு வேண்டிய பொழுது உடனடியாகத் துணை செய்யாமல் "இதோ வருகிறேன்" என்றோ "இப்பொழு தென்ன அவசரம்?" என்றோ நீட்டித்துக் காலத்தாழ்த்தாமல் உதவி செய்யும் பெண்ணே உயரிய வாழ்க்கைத் துணைவியாவாள்.

சிறு தெய்வங்களைத் தொழாது கணவனுடன் ஒன்றிய உணர்வால் ஒன்றித்து வாழ்தலின் காரணமாக உணர்வு நிறைந்த உறக்கத்தினின்று கண் துயில் நீங்கியவுடனேயே கணவனை உள்ளத்தால் நினைந்து, உணர்வால் தொழுது எழுகின்ற பெண், வேளாண்மை செய்தவன் வேண்டியவாறு பெய்யும் மழை வேளாளனுக்குப் பயன்படுவதைப் போல இந்தப் பெண், தன்னைக்கொண்ட கணவனுக்கு ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியாக விளங்குவாள்.

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை" (55)