பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்




தலையாய கற்பு

உலகியல் வாழ்க்கையில் உறவின் சிறப்பே தலைதுாக்கி நிற்கிறது. நட்பு, காதல் ஆகிய எத்துறை உறவானாலும் சரி, இயற்கையில் அமைந்ததாக இருப்பின் சிறப்புடையதேயாம். செயற்கை முறையில் ஏற்பட்டு வரும் நட்பும், காதலும் சிறப்புடையன அல்ல. மேலும் இத்தகு உறவு வெஃகுதலைப் பெருக்கி, அழுக்காற்றை வளர்த்துத் துன்பியல் பிரிவைத் தரும். முன்னையதில் காவல் இல்லை. பின்னையதில் காவலே உண்டு.

திருவள்ளுவர் இயற்கையைத் தழுவிய இயல்பாய் அமைகின்ற ஒழுகலாறுகளையே எடுத்துக் கூறுகின்றார். மனித சமுதாயத்தின் இனிய ஒழுக்கங்களுள் ஒன்று கற்பு நெறி. மனித இனம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்தபிறகு கால்கொண்ட ஒழுக்க நெறி கற்பு நெறி.

அடுத்து, பல்வேறு தீமைகளைத் தோற்றுவிப்பது காமம். பகை, போர் முதலியனவும் கூட காமத்தால் விளைதலுண்டு. இத்தகு துன்பங்களின் முடிவிலேயே கற்பொழுக்கம் வகுக்கப்பெற்றது.

கற்புநெறியை இயல்பிலேயே ஒழுக்கமாகக் கொள்ளுதலே சிறப்பு. அஃதன்றிச் செய்கை முறையில் கற்பொழுக்கத்தைக் காக்க முற்படுவதில் சிறப்பில்லை. காவல் மூலம் காக்கப் பெறும் கற்பு நிலைத்து நிற்காது. சந்தர்ப்பம் வரும் பொழுது கெடும். அதனாலேயே எதிர்த் தாக்குதல் வந்த பொழுதும் காக்கப் பெற்ற கற்பைப் பெரிதெனப் புகழ்ந்து பேசுகின்றன நமது காவியங்கள்.

"இதயத்தால் விரும்பிக் காக்கும் கற்பே தலையாய கற்பு” என்று திருவள்ளுவர் போற்றுகின்றார்.

"சிறைகாக்கும் காப்புஎவன் செயும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை." (57)