பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/245

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 241


"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்." (85)

என்று கேட்கின்றார். இக்கருத்தினில் நம்பிக்கையில்லாதோர் சில பேர் இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகக் கருதினார்கள்.

பாவேந்தர் பாரதிதாசன்கூட இதில் நம்பிக்கையில்லாமல், "மிடல்" என்பதனை வேலி என்று பொருள் கொண்டு வேலியிட வேண்டுமோ? என்று பொருள் கண்டிருக்கிறார். அதிலும் அவர் ஊரின் நல்லெண்ணத்தில் துளியும் ஐயப்படவில்லை. அத்தகைய பண்பாடுடையவர்களின் நிலத்துக்கு வேலியடைக்க வேண்டியதில்லை-ஊரே காப்பாற்றும் என்று கூறுகிறார். அவர் அத்தகு கருத்துக் கொண்டதற்குக் காரணம், நிலம் விதை போடாமலேயே விளையும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதியதே போலும்!

திருவள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை. நிலத்தையுடையவர்கள் விதை பாவ வேண்டுமோ என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகிறார் என்று கருதுவதில் தவறில்லை.

இம்மையும் மறுமையும் இன்பந் தரும்

மனித வாழ்வின் இலட்சியம் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுதல். சில ஒழுக்கங்கள் இம்மைப் பயன் மட்டுமே தரும். மிகச் சிலவே இம்மை மறுமை ஆகிய இரண்டுக்கும் இன்பந் தரும். இருமையும் இன்பந் தரும் அம் மிகச் சிலவற்றுள்ளும், பெரும் முயற்சியின்றி எளிமையில் கைவரக் கூடிய ஒழுக்கம் இனியவை கூறல்.

மனித குலத்தின் உறவுக்கும் இன்பத்திற்கும் அடிப்படை இனியவை கூறலேயாகும். இனியவை கூறலினும்