பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லையென்றும் கூறுகிறது தமிழரின் வாழ்வியல் காட்டும் புறநானூறு.

"ஆன்முலை யறுத்த அறனிலோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாய் உளவென"

என்று கூறி, நிலமே நடுக்குற்றுப் பெயர்ந்தாலும் நன்றி மறக்கக் கூடாதென வலியுறுத்துகிறது; அது.

"நிலம்புடை பெயர் வதாயினு மொருவன்
செய்திகொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ"

என்றும் பேசுகிறது.

கற்றோர் ஏத்தும் கலித்தொகையும், "ஒருவன் தனக்கு இடர்வந்துற்ற போது உதவியவர்க்கு அவருக்குத் தேவைப்படும் காலத்தே உதவாது போனால், தானே தானாகத் தேய்வான்” என்று கூறுகிறது. நன்றி கொன்ற பாவம் இவ்வுடல் ஒழிந்த பிறகும்கூட உயிரைத் தொடர்ந்து நின்று துன்புறுத்தும் என்றும் கலித்தொகை கூறுகிறது.

"கற்பித்தான் நெஞ்சழுங்கப்
பகர்ந்துண்ணான் விச்சைக்கட்
டப்பித்தான் பொருளே போற்
றமியவே தேயுமா
ஒற்கத்துள் உதவியார்க்
குதவாதான் மற்றவன்
எச்சத்துள் ஆயினும் அஃது
எறியாது விடாதே காண்".

கவியரசன் கம்பன் "உதவி கொன்றோர் உய்தற்கு உபாயமே இல்லை" என்று கூறுகின்றான். திருவள்ளுவர்,