பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 245


வையத்துள் வாழ்வாங்கு வாழ வகுத்துக் காட்டிய அறநெறிகளுள் செய்ந்நன்றி மறவாமை ஒன்று. திருவள்ளுவர்,

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு." (110)

என்ற குறட்பாவில் பயன்களை அல்லது விளைவுகளை அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது உணர்ந்தின்புறத்தக்கது.

எந்நன்றி என்பதன் மூலம், நன்றல்லா எல்லாவற்றினையும் உள்ளடக்கினார். கொன்றார்க்கும் என்பதிலுள்ள உம்மை நன்றல்லாதனவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது. உய்வுண்டாம் என்ற சொல்வழி 'உய்தல் கூடும்' என்று பொருள் கொள்ள முடிகிறதே யன்றி, உறுதிப்பாடில்லை. “செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை' என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கக் காண்கிறோம், உய்வில்லை என்பதனாலேயே பல பிறப்புக்களிலும் உய்வில்லை என்பதும் பெறப்படுகிறது.

ஆதலால், நாம் அனைவரும் நன்றியறிந்து கடமைப் பாடுடையவர்களாக வாழ வேண்டும். நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிக்கடப்பாடாக அவனை வாழ்த்துதல் வேண்டும். வாழ்த்துதல் மட்டும் இறைவனை மகிழ்விக்காது. அவன் உவக்கக்கூடிய வகையில் அவனுடைய அருமைக் காரியப்பாடாக இருக்கின்ற உயிரினங்களுக்குத் தொண்டு செய்தலும் ஒருவகை வழிபாடேயாகும். பல்வேறு உயிர்வர்க்கத்தின் உழைப்பினாலும், உதவியினாலுமே நாம் வாழ்கின்றோம். மீண்டும் அந்த உயிர்வர்க்கத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டாமா என்ன? அதுவே நன்றி காட்டும் பண்பு. அதுவே சிறந்த இறை வழிபாடு.

ஆண்டவன் எண்ணத்தோடு அல்லது திருவருட் சிந்தனையோடு தொண்டு செய்யவேண்டும். நன்றி காட்டுதலும் ஒருவகை வழிபாடேயாகும்.