பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 249


உரை கண்டுள்ளார். நன்மக்கள் என்ற உரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது. பின்னையது ஏற்றற்கில்லை. மணக்குடவர் ஆரவாரத் தொழிலின் மீதேற்றினார். காளிங்கர் ஒழுக்கத்தின்பாற் படுத்தினார். மேற்கண்ட உரைகள் அனைத்தும் ஆராய்ச்சிக்குரியனவாகவே தோன்றுகின்றன. திருவள்ளுவரின் திருவுள்ளத்தைக் கண்ட அமைதி தோன்றவில்லை. மேலும், உரையாசிரியர்கள் தத்தம் காலத்தே வழக்கில் இருந்த செய்திகளின் சார்பிலேயே உரை எழுதியிருக்கின்றனர்.

இலக்கண மரபுப்படி எஞ்சுதல் எச்சம். ஒருவனுடைய மரணத்திற்குப் பிறகு அவனுடையதாக இந்த உலகில் எஞ்சுவது அவனுடைய புகழ் அல்லது பழியேயாகும். நடுவு நிலைமை கொண்டொழுகியோருக்குப் புகழ் நிற்கும். அல்லாதோர்க்குப் பழி நிற்கும், வரலாற்றுப் போக்கிலும் இவ்விரண்டு காட்சிகளையும் பார்க்கிறோம். பாரியின் புகழ் எஞ்சி இன்றும் உலவுகிறது. அழுக்காற்றின் காரணமாக நடுவிகந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தரின் இகழ்ச்சியும் -- பழியும் இன்றும் எஞ்சி நிற்கிறது. ஆதலால்,

"தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” (114)

என்ற குறட்பாவுக்கு எச்சத்தாற் காணப்படும் என்பதற்கு அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கின்ற புகழ் அல்லது பழி இவையே அவர்களின் நடுவு நிலைமைச் சிறப்பைக் காட்டும் என்று பொருள் காண்பதே சிறப்பாகத் தெரிகிறது.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

னிதனைக் கெடுதலில் வீழ்த்தும் குணக் கேடுகளில் தலையாயது ஆணவம். ஆணவத்தின் வழிப்பட்டது அகங்காரம். அகங்கார குணம் படைத்தவன் பிறரை மதிக்க