பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நலன்தரக் கூடியதென முடிவெடுக்கப் பெற்ற அடிப்படைச் சமுதாய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். குடி என்பது நாட்டுக் குடிமகன் என்பதை உணர்த்துமே தவிரச் சாதியை உணர்த்தாது.

தனிமனித ஒழுக்கங்களைப் போலவே, நாட்டு ஒழுக்கங்கள் என்றும் சில உண்டு. சிறப்பாக இன்று நம் பாரத நாட்டை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னுடைய உரிமையைப் பெற மூன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். இவை இன்றையச் சூழலில் பாரதநாட்டுச் சமுதாயப் பொது ஒழுக்கம்.

இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத வேறுபாடின்றி ஒரே குலம்' என்று கருதிப் போற்றுவது முதல் ஒழுக்கம்.

தன்னிச்சை வழி இயங்காமல், பலர் கருத்தறிந்து, பலரின் முடிபுக்கிணங்கி வாழும் மக்களாட்சிப் பண்பு இரண்டாவது ஒழுக்கம். அடுத்து, இந்நாடு பொது வீடு-இவ் வீட்டிலுள்ள உடைமை அனைத்தும் எல்லோரும் அனுப வித்தற்கேயாம். சிலரிடத்துப் புளிச்ச ஏப்பமும், இன்னும் பலரிடத்தில் பசியேப்பமும் இருப்பது - இருக்க அனுமதிப்பது நியாயமுமல்ல - நீதியுமல்ல. ஆதலால், எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று அனுபவிக்கக் கூடிய சமவாய்ப்புச் சமுதாயத்தை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது மூன்றாவது ஒழுக்கம். வாழ்வில் இம் மூன்றொழுக்கங்களையும் கடைப் பிடித்தொழுகுவோரே இந்தியக் குடியுரிமைக்கு ஏற்புடையராவர். அவர்தம் பெயரே பாரத நாட்டு மக்கள் பட்டியலில் என்றும் நின்று விளங்கும். அப்படி வாழாதார் பெயர்கள் மக்கள் பட்டியலிலிருந்து விலக்கப்பெற்று, இழிதன்மையுடைய கால்நடைகளின் கணக்கில் சேர்க்கப்படும். இக்