பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால், அவரிடத்திலோ, சமுதாய ஒழுக்கம், நாட்டு ஒழுக்கம், என்பது சிறிதளவும் இல்லை. அவர் சாதிப் பகையை வளர்ப்பார். ஒன்றுபட்டு வாழுதலுக்கு உலைவைப்பார். பிறர் கருத்தை அறிய மறுப்பார். தன் கருத்தையே சாதிப்பார். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழுகின்ற சமநிலைச் சமுதாயத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். தன் லாபம் ஒன்றையே கருதுவார். சமுதாய பகை ஒழுக்கக் கேடுகளாகிய அழுக்காறு, வெஃகுதல், வெகுளி, புறங்கூறல், கலகம் செய்தல் ஆகியவற்றையே மேற்கொண்டு ஒழுகுவார். சமுதாய ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்ற அன்புடைமை, பொறையுடைமை, ஒப்புரவறிதல் ஆகிய இனிய ஒழுக்க நெறிகள் அவர் அறியாதன. இப்படிப்பட்ட ஒருவர் பெயர் மக்கள் கணக்கில் இருக்கிறது. திருவள்ளுவர் சொல்கிறார், மக்கள் கணக்கிலிருந்து அவர் பெயரை நீக்கி விடும்படி நீக்கி விடுவது மட்டுமின்றி, இழிந்த உயிர்வர்க்கங் களுக்கு ஏதாவது கணக்கிருந்தால், அதில் சேர்த்துக் கொள்ளும் படியும் சொல்லுகின்றார்.

"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கும்
இழிந்த பிறப்பாய் விடும்.” (133)


குடிமைப் பண்பை எவ்வளவு அழகாகத் திருவள்ளுவர் விளக்குகிறார். பரந்த பாரத நாட்டு மக்களிடத்தில், சிறந்த குடிமக்கள் இயல்பு வளர்ந்து, நாட்டு ஒழுக்கம் சிறந்து வளர வேண்டும். பாரத நாட்டில் நாட்டு ஒழுக்கமாகச் சிலவற்றை நாம் நியதி செய்துகொண்டு அந்நெறியில் ஒழுக வேண்டும்.

பாரத நாடு மிகப் பெரிய நாடு. பல்வேறு சமய நெறிகளைக் கொண்டு ஒழுகுகிற நாடு. எனினும் மொழி, சமய வேற்றுமைகளைக் கடந்த ஓர் உணர்ச்சி பூர்வமான ஒருமைப்பாட்டைக் கொள்வது நமது நாட்டொழுக்கங்களில் ஒன்று.