பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 259


படவில்லை. அவர்களின் மனமாற்றமே பேசப்படுகிறது. பகைவர் நமக்குச் செய்யும் தீங்குகளால் நாம் அழிகிறோம் என்பது உண்மையன்று. நம்முடைய குறைகள் மிகுந்திருக்குமானால் பகைவர்களுக்கு இடமேற்படும். இதற்கு மாறாக அவர்களால் நமக்கு விளையும் துன்பங்களையும் தொல்லைகளையுமே வாயில்களாகக் கொண்டு புது அறிவும் புது முயற்சியும் செய்வோமாயின் கிளறிய நிலத்தில் பயிர் விளைவது போல நாமும் அறிவால் - ஆற்றலால் செழித்து வளர முடியும். நம்முடைய வளர்ச்சி மிகுகின்றபோது, பகைவர்களும் பகையாற்றல் ஒடுங்கி நம் நிழலில் வாழ முற்படுவர். நாமும் வாழ்வளிக்க முடியும்.

பழிவாங்குதல் பழியினைச் சுமத்தும் - புகழைக் கெடுக்கும். பொறுத்தல் புகழைத் தரும் - புதுமை நிறைந்த பொலிவுடைய எதிர்காலத்தை உருவாக்கும். திருக்குறளைப் படித்துச் சிந்தனை செய்து வாழ்க்கையோ டிணைத்துச் செயல்படுத்த முயல்வோமாக!

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை." (151)

"நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்." (154)


ஏன் சுற்றம் கெடும்?


குற்றம் செய்தவனுக்குக் குற்றத்திற்குத் தண்டனை உண்டு. அதுதான் நியாயமும் நீதியும் கூட. ஆனால் திருவள்ளுவர் ஒருவன் செய்கின்ற குற்றத்திற்காக, அவனுடைய சுற்றம் முழுவதுமே உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்று கூறியுள்ளார். இதில் என்ன நியாயத் தன்மை இருக்கிறது என்று ஆராய்தல் வேண்டும்.