பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 279


தீர்க்கிறார்கள். ஆக, கடந்த நூற்றாண்டைவிட, இந்த நூற்றாண்டில் பேச்சு அதிகம். வீட்டிலும் அதிகம். நாட்டிலும் அதிகம். இங்ஙனம் வளர்ந்துவரும் பேச்சு முறை ஆக்க வழிப்பட்டதாக -- பெரும் பயன் தரத்தக்கதாக வளரு மானால் அது பாராட்டுதற்குரியதாகும். மனிதனிடத்தில் சொல்லாட்சி தோன்றியதே. பொருளை உணர்த்துவதற்குத் தான்! பொருள் வழிப் பயன் பெறுதலும், தருதலுமே சொல்லாட்சியின் இறுதி இலட்சியம். மேலும், உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டி உறவு முறையை வளர்த்துக் கொள்ளலே சொல்லாட்சி. மனிதர்களுக்குள் வளர்கின்ற பகை, பிளவு உணர்ச்சிக்குப் பெரும்பாலும் காரணம் தகுதியில்லாததோர், சொற்களைத் தகுதியில்லாத முறையில் கையாளுவதேயாம். இயற்கையமைப்பில் பல்வேறு தடைகளைக் கடந்து மனிதனின் வழிவழிப்பட்ட முயற்சி யால் தோன்றும் சொற்கள் பயனற்றவைகளாகப் போவதைப் பார்த்துத் திருவள்ளுவர் வருந்துகிறார். சொல்லாட்சியும் உழைப்பின் விளைவே. இத்தகு மேம்பட்ட சொல்லாட்சி பெரும்பான்மையான மக்கள் வாழ்வில் அவர்கட்கும் பிறருக்கும் பயனில்லாமலே அழிவதைப் பார்த்துக் கழிவிரக்கம் கொள்கிறார் திருவள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்கும் புல்லிய மாந்தரை இளங்கோவடிகள் 'வறுமொழியாளர்' என்று ஏசுகின்றார். திருவள்ளுவர் பயனற்ற சொற்களைக் கேட்டு மகிழ்வோரையும் கண்டிக்கின்றார்.

'பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.” (196)

என்று கூறுகிறார். நெல்லோடுதான் பதரும் சேர்ந்திருக்கிறது. அதனாலேயே, அதுவும் நெல்லாகி விடுமா என்ன? பயன்படுத்துவோர் விழித்தெழும் வரையில், பதரும் நெல் லோடு சேர்ந்திருக்கும், பின்னர் பதர் தூற்றப்பெறும்.