பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மிகுந்து காணப் பெறுகின்றன. அது இயற்கை. பரிணாம வளர்ச்சியிலும் கூட இதுவே நியதி.

விலங்குகள் உடல் தற்காப்பிலேயே ஈடுபடும். உயிரியல் . அறிவு கைவரப் பெற்றமையின் காரணமாக மனிதன் ஆன்மாவையும் தற்காத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக் கிறான். அதனாலேயே விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும், விருப்பம், சிந்தனை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி வற்புறுத்தப் பெற்றன. 'தீவினை அச்சம்' என்றே திருக்குறள் அதிகார வைப்பு ஓதுகின்றது. தீவினை செய்தலில் அச்சமல்ல -- தீவினை பற்றிய அளவிலேயே அச்சம்! பெரு வெள்ளத்தைக் கண்டு விலகி ஓடுதல் போன்றது. தீவினையுணர்வுகளினின்றும் அஞ்சி ஒதுங்கிக் கொள்ளுதல். தனக்குத்தான் உண்மையான அறிவொடுபட்ட விருப்பம் இருக்குமாயின் அவன் பிறருக்கு யாதொரு தீங்கும் - சிறியதேயாயினும் செய்யற்க என்று திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார்.

"தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.” (209)

என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு.

பிறருக்குத் தீங்கு செய்யும்போது - பிறருக்குத் துன்பம் உண்டாக்குவது போலத் தோன்றினாலும், அது பயன் விளையுங் காலத்துத் துன்பம் செய்தாருக்கும் துன்பம் தருதலின் தற்காத்துக் கொள்க என்ற கருத்து இங்கு பெறப் படுகிறது.

நாம் பிறிதொருவருக்குத் தீங்கு செய்யத் திட்டம் தீட்டலாம் - பேசலாம் - திட்டப்படி செய்யலாம். நம்மால் துன்பம் இழைக்கப் பெறுகிறவன் நம்முடைய துன்பத்தை அனுபவிக்கவும் செய்யலாம். அவன் திருப்பித் தீங்கு செய்யத் தெரியாதவனாக இருக்கலாம். செய்தற்குரிய ஆற்றல் அற்றவனாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அறக்கடவுள்