பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 287


பொறிகளின் மீது தனியரசு செலுத்துவோரே பொது வாழ்விலும் கூட்டுப் பொதுவாழ்க்கையைத் திறமையாக நடத்த முடியும். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல்.

ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வரும் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் பெரும்பாலும் 'இல்லாதவர்களுக்குக் கொடுத்தல் -- உதவி செய்தல்' என்ற தன்மையிலேயே பொருள் கண்டுள்ளனர். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் பண்பை - இயல்பை, ஈகை என்ற தனி அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகின்றார். ஈகை, ஒப்புரவறிதல் இவ்விரண்டும் ஒன்று போலத் தோற்றமளித்தாலும் ஆழமான கருத்து வேறுபாடு உடையன. ஈகை வழிப்பட்ட சமுதாயத்தில், உடையோர் -- இல்லோர் என்ற வேற்றுமை விரிந்திருக்கும். அவ்வழிப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் தலைதூக்கி நிற்கும். ஒப்புரவறிதலில் உடையோர் இல்லோர் வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வு இன்றிக் கொடுத்தல் கடமை எனவும், கொள்ளல் உரிமை எனவும் கருதும் அடிப்படையிலேயே அந்த அதிகாரம் அமைந்துள்ளது.

"ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்."(214)

என்பது திருக்குறள். இங்கு ஒத்தது என்ற சொல்லுக்கு வழக்கம் போல பரிமேலழகர் 'உலக நடையினை' என்று எழுதித் தப்பித்துக் கொண்டு விட்டார், அது நிறைவான கருத்தன்று. 'தன்னைப் போல் பிறரை நினை' என்பது ஒரு விழுமிய ஒழுக்க நெறிவாக்கு. இன்றையச் சமுதாயத்தில் பலர் தம்மோடு பிறர் ஒத்துவர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர பிறரோடு தாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதவில்லை. பலருக்கு எது ஒத்ததோ அதற்குச் சிலர் இணங்கியே வாழவேண்டும். அதுவே சமுதாய நியதி - ஒழுக்கம். அங்ஙனம் உணர்ந்து வாழ்-