பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 293



யாக்கை பொறுத்த நிலம்

"நாடென்ப நாடா வளத்தன" என்பது திருவள்ளுவர் வாக்கு ஒரு நாடு பல்வளமும் கெழுமிய நாடாக இருத்தல் வேண்டும். இயல்பாக வளம் தருகின்ற நாடாகச் சில அமைந்து விடுவதுண்டு. நீர்வளமும், நிலவளமும் உள்ள நாடுகள் மட்டும் வளமுடையனவாக இருப்பதில்லை. அந்நாட்டில் வாழும் மக்களுக்கும் வளத்திற்கும் தொடர்புண்டு. அதனாலன்றோ புறநானூற்றுப் புலவர், நாடு நாடாக இருந்தாலென்ன? காடாக இருந்தாலென்ன? கவலையில்லை. அந் நாட்டில் வாழும் ஆடவர்கள் மட்டும் நல்லவர்களாக - உழைப்பாளிகளாக - உத்தமர்களாக இருப்பின் காடும் நாடாகும் - பள்ளமும் மேடாகும் என்றார். ஒரு நாட்டின் வளத்திற்கும், வறுமைக்கும், எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அந்நாட்டு மக்களின் மனநிலையே அடிப்படையாக அமைகின்றது. கற்றோர் போற்றும் கலித்தொகையிலும்கூட மலைவாழ் மக்கள் அல்லன செய்து வாழ்தலின் மலைபடு வளம் சுருங்குகிறது என்று கூறப்பெறுகிறது.

ஒரு தாய், தான் பெற்றெடுத்து வளர்த்த அருமையான பிள்ளை புகழ்மிக்க வாழ்வு வாழவேண்டும் என்று விரும்புகிறாள். அந்நோக்கத்தோடு வளர்க்கிறாள். ஆனால் அவன் தவறுகள் பல செய்து தண்டனைக்கு ஆளானான் என்ற செய்தியை அந்தத் தாய் கேட்டால், அவள் நிலை என்னாகும்; துன்பத்தால் துடிதுடிப்பாள் - உணர்விழந்து ஊக்கமிழப்பாள். அவள் உள்ளமும் உடலும் கொதிகலனாக மாறும். இந்த நிலையில் அவளிடத்தில் எப்படி ஆக்கபூர்வமான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியும்: அதுபோல, நிலமகளும் ஓர் அன்னை, அவளுடைய