பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மணிவயிற்றில் கோடானு கோடி மக்கள் தோன்றி வளர்கிறார்கள்-வாழ்கிறார்கள். இனிய பல நறுஞ்சுவை உணவுகளை ஊட்டி வளர்க்கிறாள் நிலமகளாகிய அன்னை. தன்னுடைய மக்கள் அன்போடும், பணிவோடும் ஒன்றுபட்டு. வாழவேண்டும் என்பதே நிலமகளின் விருப்பம். அதற்கு மாறாக, இவர்கள் தம்முள் மோதிப் பகை வளர்த்துக் கொண்டு, தம்முடைய வாழ்க்கையையும், உலகியல் வாழ்க்கையையும் களங்கப்படுத்துவதைக் கண்டும் கேட்டும் கலங்குகிறாள் - கவலை கொள்கிறாள். நிலவளம் வெப்பத்தன்மை அடைகிறது! ஆறாத் துயரத்தில் நிலமகள் அழுந்துகின்றமையின் காரணமாக, நிலமகளின் வளம் குன்றும் என்பது திருவள்ளுவரின் கருத்து. "குற்றமற்ற நிலையில் குறைவிலாது வளம் பெருக்கும் நிலம்கூட வளம் சுருங்கும், புகழற்ற உடம்புகளை நிலமகள் தாங்கும்பொழுது” என்று குறிப்பிடுகிறார். இசையிலா யாக்கை என்று குறிப்பிட்டது, சிந்தனைக்குரிய செய்தி. உயிருடைய ஒருவன் அன்பு காட்டுவான் அறஞ் செய்வான். புகழ்பட வாழ்வான். அஃதில்லையானால், உயிரற்றவன் என்பது தெளிவு. இக்குறிப்பினை இசையிலா யாக்கை என்ற குறிப்பின் மூலம் உணர்த்துகிறார். உயிருள்ள மனிதனால் நிலத்திற்குப் பயனுண்டு. உயிரற்ற பிணத்தைத் தாங்குதலால், நிலத்திற்குப் பயனில்லை என்பதைக் குறிக்க, பொறுத்த நிலம் என்று குறிப்பிட்டார். ஆக, மனிதர்கள் நல்வாழ்க்கையின் மூலம் தான் நிலத்தின் வளத்திற்கு அடிப்படையாக அமைய முடியும். இக் கருத்தினை,

"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம் (239)

என்ற குறட்பாவின் மூலம் நமக்குத் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.